தினமணி 28.06.2010
நகராட்சியில் அனுமதிக் கட்டணம் உயர்த்தியதற்கு கண்டனம்
பொள்ளாச்சி, ஜூன் 27: பொள்ளாச்சி நகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி பெற முன்பணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு, பொள்ளாச்சி சிவில் இன்ஜினியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடந்தது. கூட்டத்துக்குத் தலைவர் கே.மணிகண்டன் தலைமை தாங்கினார். செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் 2000 சதுர அடிக்குள் கட்டடம் கட்டுவதற்காக முன்பணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டி முடித்த பின் பெறப்படும் குடிநீர் இணைப்புக்கு ரூ. 4,000, பணிகள் நிறைவடையாத பாதாள சாக்கடைத் திட்ட இணைப்புக்கு ரூ. 6,000, காப்புத் தொகை ரூ. 9,500, மழைநீர் சேகரிப்புத் திட்ட வைப்புத் தொகை ரூ. 4,000 ஆக மொத்தம் ரூ. 23 ஆயிரத்து 500 வீதம் வசூலிக்கப்படுகிறது.
நகராட்சியில் வசூலிக்கப்படும் கட்டட உரிமக் கட்டணம், சேவைக் கட்டணம், அபிவிருத்திக் கட்டணம் ரூ. 5,400 என இருந்ததை ரூ. 16 ஆயிரத்து 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் உயர்த்தி வசூலிக்கும் கட்டணத்தைத் திரும்பப் பெற நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தியதற்கு சிவில் இன்ஜினியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
பொள்ளாச்சி நகரப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்தால் நெரிசல் அதிகரித்துள்ளது. கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.