தினகரன் 15.11.2010
நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் ஆடுகள் வெட்ட நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை
கரூர், நவ.15: சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைக்க நகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தில் மட்டுமே ஆடுகளை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகரில் பல்வேறு இறைச்சிக்கடைகள் ஆங்காங்கே செயல்படுகின்றன. பொதுமக்களுக்கு சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைப்பதற்காகவும், தரமாக இருப்பதற்காகவும் தமிழக அரசு ஆடுவதை கூடங்களை நவீன முறையில் அமைத்து வருகிறது. கரூர் நகராட்சியும் இதற்காக தேர்வு செய்யப்பட்டு கரூர் பாலம்மாள்புரத்தில் நகராட்சி சார்பில் ஆடுவதை சாலை ரூ.50லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. நவீன முறையில் ஆட்டை அறுக்கவும், இதற்கு தேவையான சுடுநீர் கிடைப்பதற்கான பிளாண்ட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆடு நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக டாக்டர் சான்றளித்த பின்னர் இறைச்சி வெட்டப்படுகிறது.
இதன் மூலம் சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை பொதுமக்களிடம் விற்பனை செய்வதை தடுக்க முடியும். நோய் உள்ள ஆடுகளின் இறைச்சி விற்பனை செய்வது தவிர்க்கப்படும் என்பதால் இத்திட்டத்திற்கு இறைச்சி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
ஆனால், கட்டி முடிக்கப்பட்ட பின்னர் கரூர் ஆட்டிறைச்சிக்கூடம் முழுமையான அளவில் செயல்படவில்லை. டெண்டர் விடுவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
வழக்கு தொடரப்பட்டது. தற்போது கடந்த 6மாதங்களாக செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு சில ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் மட்டுமே ஆடுகளை அறுத்து சென்று வருகிறார்கள். அனைத்து வியாபாரிகளும் இந்த கூடத்தில் அறுத்து சுகாதாரமான ஆட்டிறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கரூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கூறுகையில், சுகாதாரமற்ற மற்றும் நோயுள்ள ஆடுகளின் இறைச்சியால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இறைச்சி வியாபாரிகள், நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி ஆட்டிறைச்சிக் கூடத்தில் மட்டுமே ஆடுகளை வெட்ட வேண்டும் என்பதை கரூர் நகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.
