தினமலர் 30.04.2010
நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்ஒரு வாரத்தில் அகற்றாவிடில் நடவடிக்கை:வீட்டுச்சுவர்களில் ‘நோட்டீஸ்‘ ஒட்டி அதிரடி
ஆரணி:ஆரணி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி இருந்த இடங்களை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஆரணி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆரணி நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களில் நகராட்சி அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கட்டப்பட்டு இருந்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அந்த நோட்டீசை வீட்டு உரிமையாளர்கள் பெறவில்லை.
இதையடுத்து, நகராட்சி பில்டிங் இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாலாஜி, சுகாதார ஆய்வாளர் செந்தில், அலுவலக உதவியாளர் கிரி ஆகியோர் நேரடியாக சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று அங்குள்ள சுவற்றில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். அதில் கூறியிருப்பதாவது:நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளீர்கள். எனவே, இந்த அறிவிப்பு கண்ட 7 தினங்களுக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, நகராட்சி நிர்வாகத்துக்கு எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட விதிகளின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.