தினமணி 24.09.2010
நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்கும் அரசாணை உயிர் பெறுமா?
புதுக்கோட்டை: கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றத்தால் ரத்துசெய்யப்பட்ட நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்கும் அரசாணை மீண்டும் புத்துயிர் பெறுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் நகராட்சி ஊழியர்கள்.
தமிழகத்தில் உள்ள 148 நகராட்சிகளில் அமைச்சுப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், துப்புரவு ஆய்வாளர், நகரமைப்பு ஆய்வாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை மற்றும் உதவிப் பொறியாளர், பொறியாளர், மகப்பேறு ஊழியர், வருவாய் ஆய்வாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் விநியோகப் பணியாளர், தெருவிளக்குப் பராமரிப்போர் என்று ஏறத்தாழ 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு சலுகைகள் மற்றும் தொய்வில்லாத மாத ஊதியம் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் ஒழுங்காகப் பெற முடியாத நிலை பல நகராட்சிகளில் மாதக்கணக்கில் நீடித்ததால், அரசு ஊழியராக்கி கருவூலம் மூலம் ஊதியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்களிடையே வலுப் பெற்றது.
ஊழியர்கள் சங்கங்கள் நகராட்சிகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தன.
கடந்த 28.8.1989-ல் சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி நகராட்சி அலுவலர் சங்கங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாகவும் அதனடிப்படையில் நகராட்சி மற்றும் நகரியங்களில் பணிபுரியும் பொது சுகாதார ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களும் அரசு ஊழியர்கள் ஆக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடந்த 5.9.1989-ல் அரசாணை (நிலை எண் – 600) வெளியிட்டு நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அரசு அறிவித்தது. மேலும், மறு ஆணை பிறப்பிக்கும் வரை ஊழியர்களுக்கு நகராட்சி நிதியிலிருந்தே ஊதியம் வழங்கப்பட வேண்டும். தேவையான சட்டம் மற்றும் விதித்திருத்தங்கள் பின்னர் வெளியிடப்படும் எனத் நிதித்துறையின் ஒப்புதலோடு குறிப்பிடவும்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி பணியாளர்களும் அரசு ஊழியராக மாறினர்.
இந்நிலையில், திமுக அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அரசாணை கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே மீண்டும் 1996-2001-ல் ஆட்சிப் பொறுப்பிலிருந்த முதல்வர் கருணாநிதியும் தன்னுடைய அரசு அறிவித்த அரசாணையை என்ன காரணத்தினாலோ அமலாக்கவில்லை.
கடந்த 2001-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசால் கடந்த 31.5.2005-ல் அரசாணை (நிலை எண் – 71) மூலம் தமிழ்நாடு இரண்டாவது மாநில நிதிக் குழு ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யுமாறு பரிந்துரைத்தை ஏற்று நகராட்சிப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்குவதற்கான பணி விதிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு 14.9.1989-ல் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
2006-ல் மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அரசிடம் தங்கள் கோரிக்கையை பல வழிகளிலும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இதுவரை எவ்விதப் பலனுமில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். குமரிமன்னன் கூறியது:
“”நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்த அரசாணை 2005-ல் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் உயிர்ப்பித்து அனைவரையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி 13 துறை வாரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மண்டல மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், பல்வேறு வழிகளிலும் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.