தினமலர் 12.02.2010
நகராட்சி கடைகள் கூடுதல் வாடகைக்கு ஏலம்
ஓசூர்: ஓசூரில் நேற்று நான்காவது முறையாக நடந்த நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட் கடை ஏலத்தில், கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 23,000 ரூபாய் மாத வாடகைக்கு கடைகள் ஏலம்போனது. அதனால், நகராட்சிக்கு நிரந்தர கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட் 10 கோடி ரூபாயில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூரு நான்கு வழிச்சாலையில் கட்டப்படுகிறது. நகராட்சியில் தற்போது நிலவும் கடும் நிதி பற்றாக்குறையால் பஸ் ஸ்டாண்ட் பணியில் தேக்கம் ஏற்பட்டது.நிதி பற்றாக்குறை சமாளிக்க பஸ் ஸ்டாண்டில் கட்டப்படும் 76 கடை, இரு ஹோட்டல்களை ஏலம்விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
புது பஸ்ஸ்டாண்ட் கடை ஏலம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூன்று முறை நடந்தது. வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு கலந்து கொள்ளவில்லை. ஐந்து கடை மட்டும் ஏலம் போனது. நான்காவது முறையாக ஓசூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. ஏல நடவடிக்கை அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மண்டல இயக்குனர் சவுந்தரராஜன், நகராட்சி கமிஷனர்கள் பவுலோஸ் (கிருஷ்ணகிரி), பன்னீர் செல்வம் (ஒசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாபாரிகள் ஆர்வமாக கலந்து கொண்டு கடைகளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
மொத்தம் இரு ஹோட்டல்கள், 71 கடைகள் ஏலம் விடப்பட்டது. கீழ் தளத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது.
கடை எண் ஒன்று மற்றும் மூன்று 19,000 ரூபாய்க்கும், நான்காம் எண் கடை 21,690 ரூபாய்க்கும், ஐந்தாம் எண் கடை 23,900க்கும், ஆறாம் எண் கடை 20,000, ஏழாம் எண் கடை 20,500 கடை எண் 11, 17,700க்கும், 42ம் நம்பர் கடை 21,200 ரூபாய்க்கும், 45 நம்பர் கடை 21,700க்கும் ஏலம் போனது. மேல்தளத்தில் உள்ள கடைகள் 4,000 முதல் 4,800 ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் போனது.
ஏலம் போன 15 கடைகள் அனைத்தும் அதிக மாத வாடகைக்கு ஏலம் போனதால், நகராட்சிக்கு முன் வைப்பு தொகை மூலம் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. மாத வாடகை மூலம் நகராட்சிக்கு நிரந்தர வருமானமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.