தினமணி 06.09.2010
நகராட்சி கடை வாடகை: விதி மீறும் வியாபாரிகள்!
தருமபுரி, செப்.5: தருமபுரி பேருந்து நிலையத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் அந்த கடையை வேறு வியாபாரிகளுக்கு உள்வாடகைக்கு விட்டு லாபம் சம்பாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் சுமார் 400 கடைகள் உள்ளன. இவைகளுக்கு 2 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது. கடைகளுக்கு முன் பயணிகள் அமர்ந்து செல்வதற்காக விசாலமான இடவசதி உள்ளது. ஆனால் அந்த இடத்தின் பெரும்பகுதியை அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கடைகளின் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் மீண்டும் அந்த இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துக்கொண்டு விட்டனர். சிலர் கடையில் தடுப்பு ஏற்படுத்தி வேறு வியாபாரிகளுக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரே கடையில் இரண்டு, மூன்று கடைகள் உள்ளன. மேலும் சிலர் தங்களது கடைகளை மொத்தமாக வேறு நபர்களுக்கு வாடைகைக்கு விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து உள்வாடகை செலுத்தும் வியாபாரி ஒருவர் கூறியது:
இந்த கடையை ஏலம் எடுத்தவர் நகராட்சிக்கு 3 லட்சம் முன் பணமும், 4,500 வாடகையும் தருகிறார். அதில் பாதி இடத்தில் நாங்கள் கடை வைத்துள்ளோம். இதற்காக ஏலம் எடுத்தவருக்கு 4,000 வாடகை தருகிறோம். எங்கள் கடையின் ஒரு பகுதியை ஒரு டீக்கடைக்காரருக்கு 1.5 லட்சம் முன்பணம் பெற்றுக்கொண்டு 3 ஆயிரத்துக்கு உள்வாடகை விட்டுள்ளோம் என்றார்.
அதே போல முடித்திருத்தும் கடைவைத்துள்ள ஒருவர், கடையின் முன்பகுதியை செல்போன் கடைகாருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதற்காக அவர் 50 ஆயிரம் முன்பணமும், ஒரு நாள் வாடகை 150 பெற்று வருகிறார். இவ்வாறு கடையை பெற்ற ஒருவர் உள்வாடகை விடுவதையும், உள்வாடகை பெற்றவர் அக்கடையின் ஒரு பகுதியை மற்றொருவருக்கு வாடகைக்கு விடுவதையும் அங்கு பரவலாக காணமுடிகிறது.
இது குறித்து நகர்மன்றத் தலைவர் டி.சி.பி.ஆனந்தகுமாரராஜா கூறியது: கடையை ஏலம் எடுத்தவர் சுயமாக இக்கடையை பயன்படுத்த வேண்டும். நகராட்சி விதிகளின்படி கடைகளை உள்வாடகை விடுவது குற்றமாகும். அவ்வாறு உள்வாடகை விடப்படும் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.