தினமலர் 24.08.2010
நகராட்சி கமிஷனர் அட்வைஸ் : மழைகாலம் துவங்குவதால் சுகாதாரம் அவசியம் தேவை
திருத்துறைப்பூண்டி: “திருத்துறைப்பூண்டி நகராட்சிப்பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், பொது இடங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்‘ என திருத்துறைப்பூண்டி நகராட்சி கமிஷனர் திருமலைவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி, மேலும் அவர் கூறியதாவது: வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ளதால் மழை நீர் தேங்கும் பொருட்களில் பகலில் கடிக்கும் கொசுக்களான ஏடிஸ் வகை கொசு உற்பத்தியாகும். இவ்வகை கொசு மூலம் ஆல்ஃபா வைரஸ் கிருமி மூலம் சிக்–குன்–குனியா எனும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை தடுக்க கொசு உற்பத்தியை தடுத்தல் மற்றும் கொசு உற்பத்தி இடங்களை அழித்தலாகும். இக்கொசுக்கள் நன்னீர் தேங்கும் இடங்கள் மூலலே உருவாகிறது. கண்ணாடி குடுவை, தேங்காய் மூடி, சிமெண்ட் தொட்டி, உடைந்த பூந்தொட்டி, ஆட்டும் உரல், பிளாஸ்டிக் டிரம், பிளாஸ்டிக் கலன், டயர், தார் டிரம் போன்ற பொருட்களில் மழைநீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாவதுடன், சிக்–குன்–குனியா ஏற்பட வாய்ப்புள்ளது.
கொசு உற்பத்தியாகும் வகையில் எவரேனும் தங்கள் வளாகத்தை பராமரிப்பின்றி வைத்திருந்தால் சுகாதார விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.