தினகரன் 11.06.2010
நகராட்சி கவுன்சில் மருத்துவ ஊழியருக்கு கியூ.ஐ.சி. பயிற்சி
புதுடெல்லி, ஜூன் 11: நகராட்சி கவுன்சிலின் கீழ் வரும் பாலிகா மருத்துவமனை, பாலிகா மகப்பேறு மருத்துவமனை, நகராட்சி கவுன்சில் அலோபதி, ஹோமியோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவமனைகள், மகப்பேறு மற்றும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நல மையங்கள் ஆகியவற்றில் தரத்தை பராமரிக்க நகராட்சி கவுன்சில் முடிவு செய்தது. இதற்காக இந்திய தர நிர்ணய குழுவுடன் (கியூ.ஐ.சி.) கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவமனைகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவின் சான்றிதழ் பெறும் வகையில், நகராட்சி கவுன்சில் மருத்துவமனைகளில் தேவையான தரத்தை உயர்த்த கியூ.ஐ.சி. அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல், ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் அவர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
கியூ.ஐ.சி. அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நகராட்சி கவுன்சில் தலைவர் பரிமள் ராஜ் மற்றும் கியூ.ஐ.சி. செயலாளர் ஜி.ஜே.கியானி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நகராட்சி கவுன்சில் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்ட உடனும், ஊழியர்களுக்கு முழுமையான பயிற்சி அளித்தவுடனும், மருத்துவமனைகளுக்கான தேசிய தர நிர்ணய குழுவிடம் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்படும். வழக்கமாக கியூ.ஐ.சி. அதிகாரிகளின் பயிற்சி நிறைவு ஒப்புதல் கடிதம் இருந்தால் தேசிய தர நிர்ணயக் குழு சான்றிதழ் எளிதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நகராட்சி கவுன்சில் மருத்துவமனைகளின் தரம் மேம்படும்