தினமலர் 20.01.2010
நகராட்சி திட்டச்சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் : அதிகாரிகளே அனுமதி அளித்துள்ளதால் அதிர்ச்சி
உடுமலை : உடுமலை நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலையை ஆக்கிரமித்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, அதற்கு நகராட்சியே அனுமதியும் வழங்கியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை– திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. உடுமலை நகர பகுதியில் உள்ள ரோடுகள் குறுகலாக உள்ளதாலும், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், உடுமலையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே நகராட்சி ஆவணங்களில் உள்ள திட்டச்சாலையை மீட்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி திட்டச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. நகராட்சி எல்லையான பி.ஏ.பி., வாய்க்கால் முதல், நவீன எரிவாயு மயானம் வரையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு, பொள்ளாச்சி – பழநி தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாகவும், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. பி.ஏ.பி., வாய்க்கால் முதல் திருப்பூர் ரோடு வரை 100 அடி ரோடாகவும், திருப்பூர் ரோடு முதல் நவீன எரிவாயு மயானம் வரை 60 அடி அகல ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, நகராட்சி சார்பில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. நகராட்சி வசம் உள்ள வரைபடத்தில் உள்ள இடங்களை சர்வே செய்ய சென்ற நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். நகராட்சிக்கு சொந்தமான திட்ட சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, நகராட்சி அதிகாரிகளே அனுமதியும் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலை உள்ளது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் , பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, முறைகேடாக நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலை இடத்தில் பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நகராட்சியே அனுமதி வழங்கியதோடு, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. இந்த கட்டடங்களுக்கு நகராட்சி வரியும் வசூலித்து வருகிறது. பல இடங்களில் இலவச வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், திட்டச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டச்சாலையில், பாரதியார் காலனியில் 40 ஆண்டுகளாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. திட்டச்சாலைக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நகராட்சி தெரிவித்துள்ள நிலையில், நேற்று இப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வராசனிடம் மனு அளித்தனர். இதனால், திட்டச் சாலை அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.