தினமலர் 21.06.2013
நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தல் பாதாள சாக்கடை பணியில் வேகம் வேண்டும்
கோவை:கோவையில் நெரிசல் மிகுந்த ரோடுகளில் பாதாள சாக்கடை பணியை இரவு நேரத்தில் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தினார்.
கோவை மாநகராட்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி. காம்ப்ளே நேற்று ஆய்வு செய்தார்.
பூ மார்க்கெட்டிலுள்ள “அம்மா உணவகத்தை’ முதலில் ஆய்வு செய்து, உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்தார். “உணவு வகைளை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். சமைப்பதற்கும், குடிப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகத்தில் “ஈ’ க்களை ஈர்க்கும் மின்விளக்கு பொறி அமைக்கவும், குழல் விளக்களுக்கு பதிலாக சி.எப்.எல்., விளக்கு பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.
அதன்பின், கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கில் அமைக்கப்பட்ட, “லேண்ட் பில்லிங்’ பூங்காவை பார்வையிட்டார். உக்கடம் பெரியகுளம் தூர்வாரப்பட்டதை பார்வையிட்டபோது, “மக்கள் ஒத்துழைப்போடு துவங்கப்பட்ட பணியை கைவிடாமல் மற்ற குளங்களையும் மேம்படுத்த வேண்டும். குளத்தில் கழிவுநீர் கலக்காமலும், கட்டட கழிவு கொட்டாமலும், தூய்மையாக பராமரிக்க வேண்டும்’ என்றார்.
செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடப்பதை ஆய்வு செய்தார். ரோட்டின் நடுவே குழி தோண்டப்படுவதால், இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல், ஸ்தம்பித்து நின்றன. அதனால், மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல், இரவு நேரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
ஒண்டிப்புதூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குப்பை மாற்று நிலையம் அமைப்பது, பீளமேடு இந்திரா கார்டனிலுள்ள குப்பை மாற்று நிலையத்தை பார்வையிட்டார். உக்கடத்தில் புதிதாக மீன்மார்க்கெட் கட்டும் இடத்தை ஆய்வு செய்தார்.
“மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணி மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 466 கி.மீ., பாதாள சாக்கடையில் 301.90 கி.மீ., பணி (64.80 சதவீதம்) நிறைவடைந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் 582.82 கி.மீ., மேற்கொண்டதில், 347.66 கி.மீ., (59.65 சதவீதம்) நிறைவடைந்துள்ளது.
பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்யுதும் கான்கிரீட் துவாரங்கள் (மேனுவல் ஹோல்ஸ்) 20,993 இடங்களில் அமைக்கப்படுகிறது. அதில், 13,467 இடங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கு, “”பணிகளை காலதாமதம் செய்யாமல், வேகப்படுத்த வேண்டும்; பாதாள சாக்கடை பணி நிறைவடைந்த பகுதிகளில் விரைவில் ரோடு போட வேண்டும். குப்பையில் பாலித்தீன் கழிவு அதிகமுள்ளதால், அதன் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, அறிவுறுத்தினார்.
மாநகராட்சி கமிஷனர் லதா, துணை கமிஷனர் சிவராசு, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சுகுமார், கணேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
இறுதியில், மேயரை சந்தித்து வளர்ச்சி பணிகள், திட்டப்பணிகள் குறித்து பேசினார்.