தினகரன் 29.07.2010
நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை தைத்து கொடுக்க முடிவு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கூடலூர், ஜூலை 29: நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை தைத்து கொடுக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூடலூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் புதிய நகர் மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. தலைவர் அன்னபுவனேஸ்வரி, துணை தலைவர் அப்துல் ரஹ்மான், செயல் அலுவலர் ரஜினி, நகராட்சி பொறியாளர் மணி மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர், ஆய்வாளர், அலுவலக உதவியாளர்கள், மின் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் ஆகியோருக்கு 2009&10ம் ஆண்டிற்கான சீருடைகளை தைத்து கொடுக்க குறைந்த விலை புள்ளி அளித்த தையல் நிறுவனத்திற்கு பணிகளை அளிக்க வேண்டும்.
நகராட்சி பொறியியல் பிரிவுக்கு யு.பி.எஸ், இண்டர்நெட் இணைப்பு வாங்குதல், கணினி மூலம் நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நேரில் வராத வரிகளை நேரில் சென்று வசூலிக்க 2 வரி வசூல் இயந்திரம் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வாங்க வேண்டும். கூடலூர் நகராட்சியில் உள்ள 5 வாகனங்களுக்கு நிரந்தர ஓட்டுனரை நியமிக்க முன்னாள் ராணுவத்தினருக்கு கடிதம் அனுப்ப பட்டது, ஆள்அனுப்ப முன் வராததால் அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடி தேர்வு நடத்தி ஓட்டுனர் பணியிடங்களை நிரப்பவும், நகராட்சியின் புதிய அலவலகத்தில் அலுவலக பணிகளை அனைத்து பிரிவுக்கும் பரிமாற்றம் செய்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் இடைசெய்தி தொடர்பு இயந்திரம் பொருத்தவும், நகராட்சி 2வது வார்டு கோத்தர் இன ஆதிவாசி மக்களுக்கு ரூ.15 லட்சத்தில் 15 தொகுப்பு வீடுகள் அமைக்கவும் மன்ற அங்கீகாரம் கோரப்பட்டது.சீருடை தைக்க, பொறியியல் பிரிவுக்கு யு.பி.எஸ் மற்றும் இண்டர்நெட் இணைப்பு பெற மன்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது, ஓட்டுனர் பணிக்கு ஆட்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பி கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆதிவாசி மக்களுக்கு வீடு கட்ட பொது நிதியில் ஆதாரம் குறைவாக இருப்பதால் திட்ட பணி மூலம் இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பின்னர் கவுன்சிலர் பாதுஷா(சுயே): கூடலூர்&மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்கிறது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தொரப்பள்ளி முதல் கக்கநல்லா வரை வன விலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்று விவாதித்தார்.