தினமணி 19.02.2010
நகராட்சி மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை
விழுப்புரம்,பிப்.18: விழுப்புரம் நகராட்சி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி தரம் மேம்படுத்தப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தெரிவித்தார்.
நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள இந்த மருத்துவமனையை நகர்மன்றத் தலைவர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த நோயாளிகளிடமும்,ஊழியர்களிடமும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: நகராட்சி மருத்துவமனையை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படும்.
டாக்டர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது.அதற்கு அமைச்சரிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது ஆணையர் சிவக்குமார்,ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்,உதவிப் பொறியாளர் லலிதா, சுகாதார ஆய்வாளர் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.