தினமலர் 03.09.2010
நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் கடும் ஏமாற்றம்திருநெல்வேலி: ஒரு நபர் ஊதிய குழு அறிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணைகள் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி, மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் சீத்தாராமன் கூறியதாவது: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாத நிலையில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்ற ஊதிய விகிதமாவது கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு அறிக்கை மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒரு நபர் குழு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களுக்கு மட்டும் 500 ரூபாய் தர ஊதியம் உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் மாநகராட்சி பணி விதி 1996ன் கீழ் வருகிறது. கோவை மாநகராட்சிக்கு என்று தனியாக பணி விதி ஏதும் கிடையாது. இந்நிலையில் கோவை மாநகராட்சி கண்காணிப்பாளர்களுக்கு அரசாணை பிறப்பித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் அடிப்படை விதிகளை கூட புரிந்து கொள்ளாமல் ஒரு நபர் குழு பிறப்பிக்கப்பட்ட ஆணையாக உள்ளது. இதனை போன்று பொது சுகாதார துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு 400 ரூபாய் தர ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதே நிலையில் நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர சுகாதார செவிலியர்களுக்கு இந்த தர ஊதியம் வழங்கப்படவில்லை. பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரியும் இன்ஜினியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப பணியாளர்களுக்கு உயர்த்தி வழங்கப்பட்ட ஊதிய விகிதங்கள் தர ஊதிய உயர்வு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் கோரிக்கைகளை தனியாக பரிசீலனை செய்து முரண்பாடுகளை களைய முதல்வர், துணை முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த முரண்பாடுகள் களையப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். இவ்வாறு மாநில பொது செயலாளர் சீத்தாராமன் தெரிவித்தார்.