தினமலர் 05.10.2010
நகராட்சி மீது பொதுமக்கள் குறை; தலைவர் கவலை!
திருப்பூர்:””சின்ன, சின்ன வேலைகளுக்கெல்லாம் காலதாமதம் செய்வதால், ஒட்டுமொத்த மக்களும் நகராட்சி நிர்வாகத்தை குறை கூறுகின்றனர். குடிநீர் தொடர்பான பணிக்கு முன்னுரிமை கொடுத்து, விரைந்து செய்ய வேண்டும்,” என நகராட்சி அதிகாரிகளுக்கு, தலைவர் மணி அறிவுறுத்தினார்.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் மணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் குற்றாலிங்கம் முன்னிலை வகித்தார்.
கூட்ட விவாதம்:பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.,): இரண்டாவது வார்டுக்கென இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு; எத்தனை பணி முடிந்துள்ளது என்ற விவரம் தேவை.
சண்முகம் (தி.மு.க.,): எதிர்க்கட்சி வார்டுகளுக்கு அதிக பணி செய்யப்படுகிறது. என்னுடைய வார்டில் செய்ய வேண்டிய பணி நடப்பதில்லை. ஏழு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்; என்னாச்சு?
மோகன்ராஜ் (தி.மு.க.,): சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரோடு போட 14வது வார்டு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஒரு ரூபாய் கூட அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை.
செயல் அலுவலர் குற்றாலிங்கம்: சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பே, எந்தெந்த ரோடுகள் போடப்படும் என முடிவு செய்யப்பட்டது. இது, நாங்கள் முடிவு செய்தது அல்ல.
நடராஜ் (பா.ஜ.,): தற்போது, 130 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள டி.டி.பி., மில் ரோடு, நன்றாக உள்ளது. இதற்கு இவ்வளவு நிதி தேவையில்லை. இந்நிதியை பயன்படுத்தி, வேறு பழுதடைந்த ரோடுகளை போடலாம்.
பொறியாளர் மல்லிகை: கவுன்சிலர் தங்களது வார்டில் செய்ய வேண்டிய பணி குறித்து கூறிய பின்பே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நகராட்சி நிர்வாக இயக்குனரக அனுமதிக்கு அனுப்பப்பட்டது.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட, மழைநீர் சேகரிப்பு திட்டம் காணாமல் போய் விட்டது. திலகர் நகர் பகுதியில் மீன்கடைகளால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அவர்களுக்கு மாற்று இடத்தில் அனுமதி வழங்க வேண்டும். அவிநாசி ரோட்டில் இருந்து திலகர் நகர் வரும் ரோடு போட வேண்டும்.
மோகன்ராஜ்: ரோடு போடும் பணியில் நகராட்சி பாரபட்சம் காட்டுகிறது. 14வது வார்டில் கடந்த ஓராண்டில் எந்த ரோடும் போடவில்லை.செயல் அலுவலர்: சிறப்பு சாலைகள் திட்டத்தில், 11 பணிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு, ஆறு பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விடுபட்டுள்ள மீதி பணிகள், நகராட்சி பொது நிதியில் ஒதுக்கி, பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நடராஜ்: தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் வரை, புதிதாக இணைப்பு வழங்கக்கூடாது; நிறுத்தி வைக்க வேண்டும். புதிதாக தொட்டி கட்டி, தண்ணீரை சேமிக்க வேண்டும். சாமுண்டிபுரம் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
மல்லிகை (பொறியாளர்): தற்போதுள்ள தொட்டிக்கு இன்னும் 20 லட்சம் குடிநீர் வழங்கினாலும், சேமிக்க முடியும். புதிய தொட்டி கட்ட அவசியமில்லை. சாமுண்டிபுரம் பள்ளி ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது; நகராட்சிக்கு மாற்றியபின், பணி துவங்கும்.ராஜேந்திரன் (தி.மு.க.,): தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில், ஆட்சியை விட்டு போகும்போது அவப்பெயர் உண்டாகும்.
பொறியாளர்: நான்கு ஆண்டுக்கு முன், 6,500 குடிநீர் இணைப்புகள் இருந்தன. தற்போது, 14 ஆயிரத்து 651 குடிநீர் இணைப்புகள் உள்ளன. மக்கள் தொகை அதிகமானால் என்ன செய்ய முடியும்?
விஜயா (இ.கம்யூ.,): சாஸ்திரி வீதியில் 500 மீட்டர் நீளத்துக்கு சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும். மழை பெய்தால் வீடுகளுக்கு தண்ணீர் தேங்குகிறது.
சண்முகம்: டேங்க் ஆபரேட்டருக்கு வழங்கப்படும் 450 ரூபாய் சம்பளம் போதுமானதாக இல்லை; அதிகப்படுத்த வேண்டும்.
செயல் அலுவலர்: டேங்க் ஆபரேட்டர்கள் சம்பளம் தவிர்த்து, பொதுமக்களிடம் பணம் பெறுவதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பின்பே முடிவு எடுக்கப்படும்.
நகராட்சி தலைவர்: கடந்த 1996ல் வெறும் 600 இணைப்பு இருந்தபோதும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், குடிநீர் இணைப்புகளை அதிகப்படுத்துவோம் என உறுதியளித்தோம். ஆட்சி மாற்றம் நடந்ததால், இத்தகைய குழப்பம்.
சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): கடந்த 2001ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க., ஆட்சியில் மக்களின் குறைகள் தீர்வு காணப்பட்டுள்ளன. எங்களிடம் குறை உள்ளதாக, நீங்கள் சொல்ல வேண்டாம். யாரிடம் குறை உள்ளது என்பது மக்களுக்கு தெரியும், என்றார்.உடனே, எங்களிடம் குறை இருக்கிறதா என, தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து குரல் எழுப்பியதால், அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது; நகராட்சி தலைவர் தலையிட்டு அமைதிப்படுத்தினர்.
தலைவர்: நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள குறைகள் குறித்தும், அவசரம் கருதி விரைவில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள் கடிதம் தாருங்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒவ்வொன்றாக டெண்டர் வைக்கப்படும். சின்ன, சின்ன வேலைகளுக்கெல்லாம் காலதாமதம் செய்வதால், ஒட்டுமொத்த மக்களும் நகராட்சி நிர்வாகத்தை குறை கூறுகின்றனர். குடிநீர் தொடர்பான பணிக்கு முன்னுரிமை கொடுத்து, விரைந்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு, விவாதம் நடந்தது.