தினமலர் 29.10.2010
நகராட்சி வசம் வருமா பஸ் ஸ்டாண்ட்?ஊட்டி நகரமன்றத்தில்,தீர்மானம்
ஊட்டி: “அரசுப் போக்குவரத்து கழக வசமுள்ள ஊட்டி பஸ் ஸ்டாண்டை, மாவட்ட நிர்வாகம், நகராட்சிக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்‘ என, நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும், நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் உள்ளது. ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என நகரமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். கடந்த 2009 ஜூன் மாதம் நடத்தப்பட்ட நகரமன்றக் கூட்டத்தில், பிங்கர்போஸ்ட் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 8.69 ஏக்கரை நகராட்சிக்கு வழங்க மாவட்ட கலெக்டரிடம் கோர, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிங்கர்போஸ்ட் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டால், கூடலூர், கேரளா மற்றும் கர்நாடக பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கலாம் என்பதால், ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் தனியார் கல்லூரியின் வசம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி, அப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது; ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதி நகராட்சிக்கு சொந்தம் என்பதால், அந்நிலத்தை நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் நகரமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1.54 எக்டேர் பஸ் ஸ்டாண்ட் பகுதி, பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள மீன் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1.39 எக்டேரை, நகராட்சிக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்க, கலெக்டரிடம் கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, இன்று நடத்தப்படும் நகரமன்றக் கூட்டத்தில், நகரமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. நிலம் வழங்கப்பட்டால், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க முடியும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.