தினமணி 14.11.2009
நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை: ஆட்சியர்
ராமநாதபுரம், நவ. 13: ராமநாதபுரம் நகரில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலக புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:
மழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னையத் தீர்க்கும் வகையில் எம்.ஜி. மருத்துவமனை முதல் சொக்கலிங்கபுரம் வரையுள்ள பகுதியில் உள்ள வடிகால் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும் புதிய பஸ் நிலையம் முதல் சிவஞானபுரம் வரையிலான பகுதியில் தண்ணீர் தேங்காமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாம்பூரணி, கிடாவெட்டிஊரணி, வல்லான்ஊரணி ஆகியவற்றை இணைத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வெற்றிவேல் தியேட்டர் வழியாக தண்ணீரைக் கொண்டு சென்று கடலில் கலக்கும் வகையில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
தண்ணீர் முழுவதுமாக வெளியேறும் வகையிலான பணிகளைச் செய்ய ரூ. 2.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக ரூ. 20 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் நகரில் மழைநீர் தேங்கி நிற்காத நிலை ஏற்படும். நகராட்சிப் பகுதிகளில் சாலைகளைச் சீரமைக்க ரூ. 21.75 கோடி மதிப்பீட்டில் பணிகளைச் செய்யவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.