தினமணி 08.10.2013
நகர்மன்றத் தீர்மானத்தை மீறி பார்க்கிங் கட்டணம் வசூல்
தினமணி 08.10.2013
நகர்மன்றத் தீர்மானத்தை மீறி பார்க்கிங் கட்டணம் வசூல்
உதகை நகராட்சிப் பகுதியில் பொது இடங்களில்
வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று
நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை மீறி நடக்கும்
வசூலால் தினந்தோறும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.
உதகை நகராட்சிப் பகுதியில் அனைத்துச் சாலைகளிலுமே வாகனங்களை
நிறுத்திவிட்டுச் சென்று விடுவதாலும், சிலர் நாள் முழுக்க நிறுத்திவைத்துக்
கொள்வதாலும், போக்குவரத்துக்கு தடை ஏற்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின்
வாகனங்களைக் கூட நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, பார்க்கிங்
கட்டணம் வசூலிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இதன்படி உதகை நகர்மன்றத்தின் ஒப்புதலுடன் வென்லாக் சாலை, கமர்சியல்
சாலை, லோயர் பஜார், கோத்தகிரி சாலை, சேரிங் கிராஸ், பூங்கா சாலை உள்ளிட்ட 7
முக்கிய சாலைப்பகுதிகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் உரிமை குத்தகை
அடிப்படையில் ரூ. 6 லட்சத்திற்கு ஓராண்டிற்கு தனியார் வசம்
ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், வாகனத்தை ஒரு சாலையில் நிறுத்திவிட்டு மற்றொரு சாலைப்பகுதிக்கு
வந்தால் அங்கும் பார்க்கிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற கட்டாய வசூல்
நடத்தப்பட்டது. அதைத் தவிர இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையோரத்
திலுள்ள கடைக்குச் செல்வதற்காக வாகனத்தை நிறுத்தினால் கூட பார்க்கிங்
கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உதகை நகர்மன்றக் கூட்டத்தில் “5 ரூபாய்க்கு பூ
வாங்குவதற்காக 10 ரூபாய் பார்க்கிங் கட்டணம் கொடுக்கும் நிலை உதகையில்
மட்டுமே உள்ளதாக’ நகர்மன்ற பெண் உறுப்பினர்களே குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்தே உதகை நகரப்பகுதிகளில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல்
பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக நகர்மன்றத்
தலைவர் சத்தியபாமா அறிவித்தார்.
ஆனால், அந்த அறிவிப்பு நகர்மன்றக் கூட்டத்துடனேயே முடிவுக்கு
வந்துவிட்டது. பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு குத்தகை எடுத்தவர்கள்
தொடர்ந்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதுபற்றிக் கேட்டால் கட்டணம் வசூலிப்பது தொடர்பான நகர்மன்ற உத்தரவுக்கு
தாங்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால்,
அத்தகைய தடையாணை ஏதும் பெறப்படவில்லை என்று நகர்மன்ற உறுப்பினர்கள்
தெரிவிக்கின்றனர்.
இந்தக் குழப்பம் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது என்பதால், அவர்கள்
வழக்கம் போல பார்க்கிங் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். ஆனால், உள்ளூர்
மக்கள் பார்க்கிங் கட்டணத்தை கட்ட மறுப்பதால் அனைத்துச் சாலைகளிலுமே
சர்ச்சைகள் ஏற்படுகின்றன.
எனவே, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதகை
நகர்மன்றம் சார்பில் உடனடியாக உறுதியான அறிவிப்பு வெளியிடப்பட்டு,
பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பதே உதகை நகர
மக்களின் கோரிக்கையாகும்.