தினமலர் 10.02.2010
நகர் நல அலுவலராக கால்நடை டாக்டர்! மாநகராட்சியில் வினோதம்
கோவை : மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் தொடர் விடுப்பில் சென்றுவிட்டனர். இதன் காரணமாக, நகர் நல அலுவலர் கவனித்து வந்த பணிகள், கூடுதல் பொறுப்பாக கால்நடை மருத்துவம் படித்த அதிகாரியிடம் தள்ளப்பட்டது. கோவை மாநகராட்சியின் 72 வார்டுகளில் 12 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரின் பல்வேறு இடங்களில் 66 குடிசைப் பகுதிகள் உள்ளன. இங்கு சுகாதார முறைகள் உள்ளனவா, கடை மற்றும் ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் கலப்படம் உள்ளதா, தடை செய்யப்பட்ட பொருட்கள் பள்ளி, கல்லூரி அருகில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை நகர் நலத்துறை கவனிக்கிறது. சமீப நாட்களாக இப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரணம் என்ன: மாநகராட்சி நகர்நல அலுவலராக இருந்த தங்கராஜ் கடந்த ஆறு மாதமாக மருத்துவ விடுப்பில் உள்ளார். இதன் காரணமாக இவரது பொறுப்பு, உதவி நகர்நல அலுவலர் சுமதியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது, சுமதியும் தொடர் விடுப்பில் சென்றுவிட்டார்.
இதனால், மாநகராட்சி விலங்கியல் பூங்கா இயக்குனர் பெருமாள்சாமியிடம், நகர் நல அலுவலர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவுப்படி, பெருமாள்சாமி, நகர்நல அலுவலர் பணியை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர், கால்நடை மருத்துவ படிப்பு முடித்தவர். மாநகராட்சி மருத்துவமனைக்கு அன்றாடம் அனுப்பப்படும் மருந்துகளுக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் இவரிடம் உள்ளது. அதே போன்று, தடுப்பூசி முகாம் நடத்துவது மற்றும் குடிசை பகுதிகளுக்கு சென்று ஏழை, எளிய மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குதல் போன்ற பணிகளுக்கான உத்தரவு பிறப்பிப்பதும் இவரது பணியாக உள்ளது. கால்நடை மருத்துவம் படித்த இவரிடம், நகர் நல அதிகாரி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதை சிலர் விமர்சிக்கின்றனர். காரணம், மாநகராட்சி நகர் நல அலுவலராக இருப்பவர் எம்.பி.பி.எஸ்., முடித்தவராக இருக்க வேண்டும், என்கின்றனர். மாநகராட்சி வரலாற்றில் கால்நடை டாக்டரை, நகர் நல அலுவலரின் பொறுப்பை கவனிக்குமாறு நிர்வாகம் பணித்திருப்பது, பல்வேறு தரப்பினரின் விமர்சனதுக்கு உள்ளாகியிருக்கிறது.