தினமணி 27.08.2010
நடமாடும் வரி வசூல் வாகனங்களில் எல்லா வார்டு மக்களும் வரி செலுத்தலாம்: மாநகராட்சி ஆணையர்
திருச்சி, ஆக. 26: நடமாடும் கணினி வரி வசூல் வாகனங்களில் எல்லா வார்டு மக்களும் தங்களின் வரிகளைச் செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
“திருச்சி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி, வரி வசூல் பணியை விரைவுபடுத்தும் நோக்குடன், நடமாடும் கணினி வரி வசூல் வாகனம் மூலம் வரி வசூலிக்கும் பணி கடந்த 15-ம் தேதி தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஸ்ரீரங்கம் கோட்டம், இரண்டாம் வாரம் அரியமங்கலம் கோட்டம், மூன்றாம் வாரம் பொன்மலைக் கோட்டம், நான்காம் வாரம் கோ–அபிஷேகபுரம் கோட்டம் என்ற சுழற்சி முறையில் வரி வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வரி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டும் வந்தது. தற்போது, அந்த வார்டு மக்கள் மட்டுமல்லாமல், அனைத்து வார்டு மக்களும் நடமாடும் வாகனங்களில் வரிகளைச் செலுத்தலாம்.