நடைபாதை கடைகளை அகற்றும் பணி தீவிரம்
சென்னையில் சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
சென்னையில் நடைபாதை மற்றும் சாலைகளில் உள்ள பெட்டிக் கடைகளால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னையில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் அந்தந்த மண்டல அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: நடைபாதைகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கு பெட்டிக் கடைகளை அகற்றி அதன் அறிக்கையை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதன்படி, பெட்டிக் கடைகளை அகற்றி அது குறித்த விவரங்களை வருகிற புதன்கிழமைக்குள் (22-ஆம் தேதி) அளிக்க மண்டல அதிகாரிகளிடம் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதனால், பெட்டிக் கடைகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62 கடைகளும், அண்ணாநகர் மண்டலத்தில் 36 கடைகளும் அகற்றப்பட்டுள்ளன. இதேபோல, கோடம்பாக்கம் (17 கடைகள்), வளசரவாக்கம் (8 கடைகள்), திரு.வி.க. நகர் (22 கடைகள்), தண்டையார்பேட்டை (18 கடைகள்), ஆலந்தூர் (6 கடைகள்) ஆகிய மண்டலங்களிலும் கடைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் சாலையோரங்களில் பெட்டிக் கடைகள் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது. அவற்றை அகற்ற முடியாது. இதனால் மாநகராட்சி வணிக வளாகங்களில் இடம் ஒதுக்கும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க ஆலோசனை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.