தினமலர் 16.11.2010
நடைபாதை கோவில்கள் இடிப்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
பாரிமுனை : போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையில் கட்டப்பட்ட கோவில்களை இடிக்கும் பணியை மாநகராட்சி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக மூன்று கோவில்கள் இடிக்கப்பட்டன.
போக்குவரத்துக்கு இடையூறாக, சென்னையின் பல இடங்களை ஆக்கிரமித்து கோவில், சர்ச், தர்காக்கள் கட்டப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பிளாட்பார வழிபாட்டுத் தலங்களை இடிக்க கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, சென்னையில் பிளாட்பாரங்களில் கட்டப்பட்ட, 300 வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நேற்று துவக்கியது. பர்மாபஜாரில் இருந்த விநாயகர் கோவில், கலெக்டர் ஆபீஸ் முன் மற்றொரு பிள்ளையார் கோவில், துறைமுக மருத்துவமனை எதிரில் ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவில் ஆகியன இடிக்கப்பட்டன.பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் இடித்துத் தள்ளினர். கலெக்டர் ஆபீஸ் பின், இரண்டு மாரியம்மன் கோவில்களை இடிக்க, குடிசைப் பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மட்டும் கோவில் இடிக்கும் பணி தாமதமானது.ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதையொட்டி, வடக்கு கடற்கரை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.”கோர்ட் உத்தரவில் கூறப்பட்ட அனைத்து பிளாட்பார வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்படும்‘ என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.