நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி
கோத்தகிரி மார்க்கெட் அருகே பேரூராட்சி சார்பில் ரூ.20 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் நடைபாதை மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
கோத்தகிரி மார்க்கெட் மற்றும் காமராஜர் சதுக்கத்தை மையமாகக் கொண்டு புனித மரியன்னை மகளிர் பள்ளி, கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி, அந்தோணியார் நடுநிலைப் பள்ளி, ஹோம் மெட்ரிக் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் இயங்கி வருகின்றன.
கோத்தகிரி-கோவை பிரதான சாலையாக இப்பகுதி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதனால் சாலையை கடக்க மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து நடைபாதை மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேம்பாலம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள கோத்தகிரி வந்த மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் மார்க்கெட் அருகே நடைபெற்றுவரும் மேம்பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பொறியாளர் சாதிக்பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.