தினமணி 12.02.2010
நடைபாதை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் ஏப்ரலில் கட்டி முடிக்கப்படும்: மேயர்
தியாகராயநகர் பாண்டிபஜாரில் நடைபாதை வியாபாரிகளுக்காக மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி வணிக வளாகம்.
சென்னை, பிப். 11: நடைபாதை வியாபாரிகளுக்காக சென்னை தியாகராய நகரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வணிக வளாகம் ஏப்ரல் மாதம் கட்டி முடிக்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் நடைபாதை வியாபாரிகளுக்காக, மாநகராட்சி சார்பில் ரூ. 5.78 கோடி செலவில் 3 இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தியாகராய நகர் பாண்டிபஜாரில் ரூ. 4.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வணிக வளாகத்தை மேயர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது: தியாகராயர் சாலை, உஸ்மான் சாலை, சிவபிரகாசம் சாலை, பனகல் பூங்காவைச் சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகளுக்காக, பாண்டிபஜாரில் இந்த அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 692 வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 லிப்ட், 72 கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்துக்குள் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சாலை நடைபாதை வியாபாரிகளுக்காக, அதே பகுதியில் ரூ. 1.23 கோடியில், 32 கழிவறைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் மார்ச் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும். இதில் 332 வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்படும். இதுபோல் வடசென்னையில் எம்.சி.சாலை சுழல்மெத்தை அருகில் இருந்த நடைபாதை வியாபாரிகளுக்காக அதே பகுதியில் ரூ. 25 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 125 கடைகள் இருக்கும். இந்தக் கட்டடப் பணி முடியும் தருவாயில் உள்ளது என்றார் அவர்.