தினமணி 20.09.2010
நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளித்தால்…
ஆம்பூர், செப். 19: மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள நடைமேடையை நடைபாதைக் கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளாக ஆம்பூர் நேதாஜி சாலை, பிராட் பஜார் சாலை அமைந்துள்ளது. இச்சாலைகள் மிக குறுகிய சாலைகளாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
நெரிசல் மிகுந்த சாலைகள்
இச்சாலைகளில் நீதிமன்றம், கிளைச் சிறை, நகர காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், வருவாய்த் துறை கிராமச் சாவடி, பத்திரப்பதிவு அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன. இதனால், இச்சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
அரசு மருத்துவமனைக்கு எதிரில் சாலையிலேயே ஆட்டோ நிறுத்துமிடமும் அமைந்துள்ளது. மேலும், அரசு அலுவலகங்களுக்கு வருவோர், தங்களுடைய வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டும் செல்கின்றனர். இக்காரணங்களால் நெரிசலும் அதிகரிக்கிறது.
நடைமேடையின் எதிரே நிறுத்தப்படும் வாகனங்கள்!
இச்சாலைகளின் ஒரு பக்கம் பொதுமக்கள் நடந்து செல்ல மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைமேடை அமைக்கப்பட்டது. அதனால் சாலை மேலும் குறுகிவிட்டது.
நடைமேடை அமைக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் தங்கள் வாகனங்களை நடைமேடைக்கு முன்பாக நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைமேடையை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதனால் பொதுமக்கள் அந்த நடைமேடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நடைமேடை கடைமேடையாக மாறியுள்ளது.
நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் அளித்தால்…
நடைமேடை மீது அமைக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றினால் பொதுமக்கள் நடைமேடையை பயன்படுத்த எளிதாக இருக்கும். போக்குவரத்து நெரிசலும் தடுக்கப்படும் என்கின்றனர் நகர மக்கள். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.