தினமணி 14.02.2010
நட்சத்திர ஹோட்டல் உணவகத்துக்கு சீல்: மாநகராட்சி அதிரடி
சென்னை, பிப். 13: கழிவு நீரை நேரடியாக கூவத்தில் விட்ட நட்சத்திர ஹோட்டலின் உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.
மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட ஆய்வின் போது, கோயம்பேடு பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக கூவத்தில் விடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஹோட்டலில் கழிவு நீர் இணைப்பும் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவுபடி, அதிகாரிகள் அந்த ஹோட்டல் உணவகத்துக்கு சீல் வைத்தனர். மேலும், சுகாதாரச் சீர்கேட்டை விளைவித்ததற்காக தமிழ்நாடு பொதுச் சுகாதார சட்டம் மற்றும் மாநகராட்சி சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த ஹோட்டல் ரூ. 16 லட்சம் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.