மாலைமலர் 24.09.2009
நந்தனம்–செனடாப் ரோடு புதிய மேம்பால பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்; அக்டோபர் மாதம் திறப்பு
சென்னை, செப். 24-
சென்னை மாநகராட்சி மூலம் நந்தனம் டர்ன்புல்ஸ் சாலை – செனடாப்சாலை சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணியினை துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.30 மணியளவில் பாலத்தின் மீது முழுமையாக நடந்து சென்று பணிகளை ஆய்வு செய்தார். மேம்பாலத்தின் கீழ் உள்ள நடைப்பாதை பணிகளையும், சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சி மூலம் டர்ன்புல்ஸ் சாலை–செனடாப் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி 12.2.2009 அன்று தொடங்கப்பட்டது. ரூபாய் 19.93 கோடி செலவில் இம்மேம்பாலம் கட்டப்படுகிறது. மேம்பாலத்தின் நீளம் 458 மீட்டர், அகலம் 8 மீட்டர். மேம்பாலம் 12 தூண்கள் மேல் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மையப்பகுதி தரைமட்டத்திலிருந்து 5.50 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் கீழே நடைபாதை உட்பட சாலையின் அகலம் 6 மீட்டராகும். இப்பாலப்பணிகளுக்காக 7 கிரவுண்டு 1425 சதுர அடி நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளது.
நிலத்திற்கான இழப்பீட்டு தொகையாக ரூபாய் 10 கோடி வழங்கப்பட்டுள்ளது. பாலப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. முதல்– அமைச்சர் கருணாநிதி டர்ன்புல் சாலை – செனடாப் சாலை மேம்பாலத்தினை அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதியில் திறந்து வைப்பார்.
அதேபோன்று, ஜோன்ஸ் சாலை ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ரூபாய் 7 கோடியே 33 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணியும் அடுத்த மாதம் முடிவடையும். சுரங்கப்பாதையின் நீளம் 303.67 மீட்டர், அகலம் 5.5 மீட்டர் ஆகும். அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்துர் சாலையில் உயர்மட்ட பாலம் ரூபாய் 6 கோடியே 3 இலட்சம் செலவில் கட்டப்படுகிறது. இப்பாலப்பணியும் அடுத்த மாதம் அக்டோபர் திங்களில் முடிவடையும். பாலத்தின் நீளம் 420 மீட்டர், அகலம் 12 மீட்டர் ஆகும்.
வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையின் மீது மேம்பாலம் அமைக்கும் பணி ரூபாய் 61 கோடியே 70 இலட்சம் செலவில் மேற்கொள்ள தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளை இணைத்து கூடுதலாக இரண்டு மாநகராட்சிகள் அமைப்பது தொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தனது அறிக்கையினை மாண்புமிகு தமிழக முதல்–அமைச்சரிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் மா.சுப் பிரமணியன், ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, இணை ஆணையர் (பணிகள்) ஆஷிஷ் சாட்டர்ஜி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதை ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.