தினமலர் 14.05.2010
நமக்கு நாமே திட்டத்தில் பணிகளா? கமிஷன் வாங்குவதை நிறுத்தணும்: அரக்கோணம் நகராட்சியில் கவுன்சிலர் அதிரடி
அரக்கோணம்: கமிஷன் வாங்குவதை நிறுத்திக் கொண்டால் நமக்கு நாமே திட்டத்தில் வேலைகள் செய்ய தயார் என கவுன்சிலர் பேசியதால் அரக்கோணம் நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர்/வேலி அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை மையங்கள், கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், சாலைகள், சிறிய பாலங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தெருவிளக்கு, நீருற்றுகள் உட்பட பல்வேறு பணிகளை செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் பணிகளை செய்ய விரும்புவோர் 33 சதவீத தொகையை தர வேண்டும். மீதமுள்ள தொகையை அரசு தரும். இது தான் நமக்கு நாமே திட்டத்தின் விதிமுறை. இந்த திட்டத்தின் கீழ் வாலாஜா, ராணிப்பேட்டை நகராட்சிகள் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அரக்கோணம் நகராட்சியில் இந்த திட்டத்தில் எந்தவொரு பணியும் செய்யவில்லை. இது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சியில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு நகராட்சி சேர்மன் விஜயராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கமிஷனர் விமலா வரவேற்றார். கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். கமிஷனர் விமலா பேசியதாவது: நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்ய கவுன்சிலர்கள் முன் வரவேண்டும். அந்தந்த பகுதி மக்கள், கம்பெனிகளிடம் பணம் வசூல் செய்து ரோடு போடுவது உட்பட பல்வேறு பணிகளை செய்யலாம்.
பழனி (அதிமுக): அரசு எல்லாவற்றையும் இலவசமாக தரும் போது ரோடு போடுவதற்கு பணம் வேண்டுமென மக்களிடத்தில் கேட்டால் யாராவது தருவார்களா? அரக்கோணத்தில் யாரும் தர மாட்டார்கள்.
துரை சீனிவாசன் (காங்): அரக்கோணம் நகராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி என 4 கோடி ரூபாய் வரி பாக்கி உள்ளது. அதை வசூல் செய்தாலே நகராட்சி தேவைகளை பூர்த்தி செய்யலாம். இங்கு எத்தனையோ கம்பெனிகள் உள்ளது. அவர்களிடத்தில் ‘அன்பாக‘ சேர்மன்தான் கேட்டு வாங்க வேண்டும். அதற்கு வேண்டுமானால் கவுன்சிலர்கள் துணை புரிகிறோம். மேலும், நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் செய்வதாக இருந்தால் கமிஷன் வாங்குவதை ‘எல்லாரும்‘ நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்படி நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் 15 சதவீத கமிஷன் பணம், 20 சதவீதம் மக்கள் பணம் என 35 சதவீத பணம் கிடைக்கும். அரசு தரும் மீதமுள்ள பணத்தை போட்டு பல்வேறு வேலைகள் செய்யலாம்.
கமிஷனர் விமலா: சரி அப்படியே செய்யலாம்.
ஜெயந்தி (காங்): பொதுமக்களிடம் பணம் கேட்டால் யாருமே தர மாட்டார்கள். இந்த திட்டம் அரக்கோணம் நகராட்சிக்கு ஒத்து வராது.
கண்ணையன் (முன்னாள் சேர்மன்): வேலூர் மாவட்டத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்பதற்கேற்ப அரக்கோணம் நகராட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகளை எடுத்து செய்ய வேண்டும். கொஞ்சம் தாமதம் ஆனாலும் நிதி வேறொரு நகராட்சிக்கு சென்றுவிடும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது. ஆக, அரக்கோணம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பணிகளை செய்ய எந்தவொரு கவுன்சிலரும் முன்வரவில்லை. கூட்டம் தொடங்கியதுமே முடியாது, நடக்காது என பதில் அளித்தனர்.