தினமலர் 09.08.2010
நல்லூரில் மின்மயானம் தேவை
திருப்பூர் : நல்லூர் நகராட்சியில் புதிதாக மின் மயானம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியுடன் இணையும் நல்லூர் நகராட்சியில், மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படை வசதியை அதிகப்படுத்துவது அவசியமானது.கிராமமாக இருந்த காலத்தில் உள்ள மயானங்களே, நகராட்சியாக மாறியும் பயன்பாட்டில் உள்ளன. அதிகமானோர் மின்மயானங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். மாநகராட்சியாக மாற்றம் அடைந்தாலும், இதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது. மணியகாரம்பாளையம், சென்னிமலைபாளையம் போன்ற இடத்தில், மயான ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் நீடிக்கின்றன. வரும் நாட்களில் மயானத்தில் இட பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நல்லூருக்கு அருகிலுள்ள, முதலிபாளையம், முத்தணம்பாளையம் ஊராட்சிகளும் குறிப்பிட்ட வளர்ச்சியினை எட்டியுள்ளன.
திருப்பூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலமாக செயல்படுவதற்கு, நல்லூரில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியாக மாற்றம் அடைந்த பின், நகரின் வளர்ச்சி விகிதம் பல மடங்கு உயரும். கிழக்கு மண்டலத்தில் மயான பற்றாக்குறை ஏற்படும் முன், மின் மயானத்தை உருவாக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.தற்போது, காங்கயம் வரை உள்ள மக்கள், திருப்பூர் மின்மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். காசிபாளையம், நொய்யல் ஆற்றின் கரை, நல்லூர், விஜயாபுரம் உள்ளிட்ட பகுதியில், இடத்தினை தேர்வு செய்து மின் மயானம் அமைக்க வேண்டும். முதலிபாளையம், முத்தணம்பாளையம், தொட்டியமண்ணரை, படியூர், பெருந்தொழுவு என சுற்றியுள்ள கிராமம் மற்றும் காங்கயம், பொங்கலூர் பகுதிகளும் இதனால் பயனடையும்.