தினமலர் 31.03.2010
நல்லூர் நகராட்சியில் அனல் பறந்த குடிநீர் பிரச்னை
திருப்பூர் : நல்லூர் நகராட்சி அவசர கூட்டத் தில் குடிநீர் பிரச்னை அனல் பறந்தது. நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; நகராட்சி தலைவி விஜயலட்சுமி தலைமை வகித்தார். வரும் 2010-11ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு; மாநகராட்சியோடு இணைக்கும் திட்டம்; எதிர்கால உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிக்கான கருத்துருவை அனுமதித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறின.
கூட்ட விவாதம்: சாந்தி (தி.மு.க.,): மணியகாரம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வழிவகை செய்ய வேண்டும். சாக் கடை அடைப்பை அகற்ற பெண் களை மட்டும் அனுப்பாமல், ஆண்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். மணியகாரம்பாளையத்தில் உள்ள சுடுகாட்டுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.விஜயகுமார் (அ.தி.மு.க.,): நகராட்சியில் ஏற்கனவே செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அப்பணிகளை நிறைவு செய்த பின், எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தலாம். எட்டாவது வார்டில் தேங்கிக் கிடக் கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். மாநகராட்சியோடு இணையும் நகராட்சியை எதற்காக தரம் உயர்த்த வேண்டும்.தெய்வாத்தாள் (இ.கம்யூ.,): குடிநீரை முறைப்படி வினியோகிப்பதில்லை. சில பகுதிகளுக்கு மட்டும் அதிகளவில் வழங்கப்படுகிறது. செரங்காடு பகுதியில் உள்ள போர் வெல்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.சுரேஷ் (அ.தி.மு.க.,): மேட்டுப்பாளையம் குடிநீரை முறையாக வினியோகிப்பதில்லை. நகராட்சிக்கு வரும் குடிநீர் அளவையும், வார்டுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவையும் தெரியப்படுத்த வேண் டும். என்.பி., நகரில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒருமுறை குடிநீர் வினியோகிக்கும் போது, ஒரு இணைப்புக்கு இரண்டு ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.சுப்ரமணியன் (மா.கம்யூ.,): குடிநீர் பிரச்னையை எழுப்பும் போது, அதிகாரிகள் பதில் மட்டும் கூறுகின்றனர்; குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இன்னும் தீர்வு வரவில்லை. குடிநீர் கிடைப்பதற்கான மாற்று வழியை ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் கிடைக்கும் வரை அனைத்து கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபடலாம். குறைவான சம்பளம் வழங்குவதால், சுகாதார பணியில் புதிதாக ஆட்கள் சேர்வதில்லை.
சுகாதார பணியாளர்களுக்கு அதிமான கூலி உயர்வை அளிக்க வேண்டும். நகராட்சி குப்பையை கொட்டுவதற்காக நிரந்தர இடம் தேர்வு செய்ய வேண்டும். சில பகுதிகளுக்கு மட்டும் அதிகமான குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.நாகராஜ் (தி.மு.க.,): குடிநீர் வினியோகிப்பதில் அதிகளவிலான முறைகேடுகள் நடக்கின்றன. புதிதாக உருவான நகர்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை செய்வதில்லை. பழைய கிராமங்களுக்குத்தான் குடிநீர் அதிகமாக வழங்கப்படுகிறது. காய்கறி தோட்டங்களுக்கும், தென்னை மரங்களுக்கும் குடிநீர் பாய்ச்சுகின்றனர். நகராட்சியின் சில பகுதிகளில் குடிக்கக்கூட குடிநீரின்றி தவிக்கின்றனர்.
நகராட்சி தலைவி விஜயலட்சுமி பதிலளித்ததாவது: குடிநீர் பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள் ளது. சுகாதார பணியாளர்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும். வார்டுகளுக்கு உரிய குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது, ‘ஈகிஸ்‘ நிறுவனம் பரிந்துரைத்துள்ள திட்டங்கள் செயல் பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. மாநகராட்சியோடு நகராட்சி பகுதிகள் இணைந்தாலும், திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், என்றார்.கூட்டத்தில், 2010-11ம் நிதியாண் டின் திட்ட மதிப்பீடு தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வரவு 847.83 லட்சம்; மொத்த செலவினம் 885.27 லட்சம்; நிதி பற்றாக்குறை 37.44 லட்சம்.செயல் அலுவலர் சண்முகம், நகராட்சி பொறியாளர் சண்முகம், துணை தலைவர் நிர்மலா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.