நவீன கழிப்பறை திட்டம் அவசியம்: ஆட்சியர்
மக்களின் வரவேற்பு பெற்ற நவீனக் கழிப்பறை திட்டம் அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடந்த மாவட்டத் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் நவீன கழிப்பறைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
தினமும் 800 பேர் வரை அதைப் பயன்படுத்துகின்றனர். இத்திட்டம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பெரிய நகரம் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். தாம்பரத்தில் ரூ. 4.50 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கூட இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இதற்காக ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர் பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களை அணுகி, அவர்களிடம் நன்கொடை பெற்று இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம். இதேபோல், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் செல்வாக்கில், பெரிய நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிடலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
பட்டா வழங்குவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பேரவையில் பட்டா வழங்க அனுமதிக்கப்பட்டால், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தவிர மற்ற இடங்களுக்கு பட்டா கிடைக்க வழி ஏற்படும். சென்னைக்கு அடுத்த நிலையில் வளர்ந்து வரும் நகரமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. ஆனால் இங்கு பஸ்நிலையம், நவீன வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பதற்கு நகரில் இடம் இல்லை. ஆனாலும், அத்திட்டங்களை செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களை அவர்கள் இடத்துக்கே நேரில் சந்தித்து மக்கள் குறைதீர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.