தினகரன் 21.06.2010
நாகர்கோவிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடக்கம் நகராட்சி அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில், ஜூன் 21: நாகர்கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சிக்கு சொந்தமான பவுண்டில் அடைத்தனர்.
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றிவந்த பசுமாடு ஒன்று கடந்த வாரம் கன்று ஈன்றது. பின்னர் கால்நடைத்துறை மற்றும் விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தினர் சேர்ந்து அந்த பசுமாட்டை மீட்டு அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள கோசாலையில் கொண்டு சேர்த்தனர்.
இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த கலெக்டர் ராஜேந்திர ரத்னூ உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள் தலைமையில் நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.
பின்னர் அவை வாகனங்களில் ஏற்றப்பட்டு சரலூர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான பவுண்டில் அடைக்கப்பட்டன. நேற்று முன்தினம் மட்டும் 2 மாடுகள், 4 ஆடுகள் பிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும். மாடுகளின் உரிமையாளர்கள் உரிய அடையாளங்களை கூறி அபாராதத்தை கட்டி மாடுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.