தினமணி 24.02.2010
நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டம்
நாகர்கோவில், பிப். 23: நாகர்கோவில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ள நகர்மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிளாஸ்டிக்ஸ் தயாரித்தல், விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதல் குறித்து விதிகளை உருவாக்கி பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்கீழ் நகராட்சி திடக்கழிவுகள் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் கழிவை உருவாக்குபவர் அதை குப்பையாக வெளியே போடுவதை தவிர்க்கும் பொறுப்புடையவர் ஆவார் என்று அந்த விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்தவும், நகரில் சாக்கடை திட்டத்தை தங்கு தடையின்றி செயல்ப
டுத்தவும் விதிகளுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் தயாரித்தல், விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதல் ஆகியவற்றை நாகர்கோவிலில் வரைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் நிபந்தனைகளை மீறி நகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் விரிப்புகள் முதலியவற்றை மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்பவருக்கும், அவற்றை உபயோகிப்பவர்களுக்கும், பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து ஒப்படைக்காத தனி நபர் அல்லது வீடு அல்லது நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கவும், அந்த வியாபாரிகளிடம் உள்ள மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக உத்தரவுப்படி இந்த விஷயத்தில் விதிகளை மீறுவோரிடமிருந்து அபராதமாக வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொகை விவரம்:
மொத்த விற்பனையாளர்– ரூ.1000, சில்லரை வியாபாரிகள்– ரூ.500, உபயோகிóப்பவர்கள்– ரூ.100, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத நிறுவனங்கள்– ரூ.100, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து ஒப்படைக்காத தனி நபர் அல்லது வீடுகள்– ரூ.25.
இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை நகராட்சி கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் உடனே வெட்டப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ நாகர்கோவில் நகராட்சியின் அலுவலகத்தில் அல்லது திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலோ சேமிக்கப்பட்டு இறுதியாக சிமெண்ட் ஆலைகளில் ஊடு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைக்கப்படும்.
இந்த வகையில் நகரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கவும், அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்படவுள்ளது.
நகர்மன்றம் அனுமதி அளிக்கும்பட்சத்தில் இந்த விதிகள் உடனே அமலுக்கு வரும் என்று தெரிகிறது.