தினகரன் 24.09.2010
நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் நகர்மன்ற கூட்டத்தில் ஒருமித்த முடிவு
நாகர்கோவில், செப்.24: நாகர்கோவில் நகராட்சி அவசர கூட்டம் சேர்மன் அசோகன் சாலமன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சைமன்ராஜ், நகராட்சி பொறியாளர் தாமஸ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
சகாயராஜ், சீனு, நாகராஜன் (அதிமுக):
நாகர்கோவில் நகராட்சியை திமுக அரசு மாநகராட்சியாக அறிவிக்காது. அடுத்து வரும் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என்றனர். (இதற்கு அருள்ராஜன் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்).
அருள்ராஜனும் சீனுவும் ஒருவரை ஒருவர் ஆவேசமாக தள்ளிவிட்டனர். அப்போது குறுக்கிட்ட சேர்மன் பத்திரிகைகாரர்கள் போட்டோ எடுத்தாச்சு. எனவே இனி அமைதியாக இருங்க என கூறினார். (அவையில் சிரிப் பொலி). தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது இருக்கைகளுக்கு சென் றனர்.
நாகராஜன் (பா.ஜ), சேகர் (சுயே):
எங்களது வார்டில் நகராட்சி பணிகளை ஆய்வு செய்யும் உதவி பொறியாளர் சரியாக பணிகளை செய்வதில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட பணிகளுக்கு கூட பில் பாஸ் செய்யவில்லை என் பதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சேர்மன்:
குறிப்பிட்ட பொறியாளருக்கு இறுதி எச்சரிக்கை விடப்படுகிறது. நகராட்சி பொறியாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும அவர் பாக்கி வைத்துள்ள பணிகளை முடித்து விட்டு பிற பணிகளை கவனித்தால் போதும். அதுவரை வெளியூர் பணிகளுக்கும் அவரை அனுப்ப கூடாது.
நாகர்கோவில் நகராட்சியை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆசாரிபள்ளம் பேரூராட்சி, பெருவிளை பஞ்சாயத்து, வடக்கு சூரங்குடி, காந்திபுரம், கரியமாணிக்கபுரம பஞ்சாயத்து ஆகியவற்றுடன் கணியாகுளம், புத்தேரி, தேரேகால்புதூர், இறச்சகுளம் ஆகிய பஞ்சாயத்துகளையும் நகராட்சி விரிவாக்கத்தில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகர்கோவில் நகராட்சியில் நேற்று நடந்த அவசர கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் அசோகன் சாலமன் பேசினார்.
பா.ஜனதா தர்ணா போராட்டம்
20 வது வார்டில் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி கல்வெட்டில் கவுன்சிலர் மணிகண்டன் பெயர் மற்றும் சேர்மன் பெயரை போடவில்லை. இதுகுறித்து நகர் மன்ற கூட்டத்தில் பேசியும் நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு தீர்வு வரும்வரை தர்ணாவில் ஈடுபடப்போவதாக கூறி பாஜ கவுன்சிலர்கள் ஆர்.எம்.முருகன், நாகராஜன், பெருமாள்பிள்ளை, மணிகண்டன் ஆகியோர் சேர்மன் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து கூட்டத்தை 5 நிமிடங்கள் ஒத்திவைத்த சேர்மன், ராஜன் எம்.எல்.ஏ விடம் போனில் பேசினார். பின்னர் கூட்டத்தை தொடர்ந்த சேர்மன், 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.