நாகூர் தர்கா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
கந்தூரி விழாவையொட்டி, நாகூர் தர்கா பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகூர் தர்காவின் கந்தூரி விழா வரும் 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் தர்கா சார்பில் நாகூர் பகுதியில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நகராட்சி கழிப்பறையை சுத்தம் செய்து பராமரிக்கவும் தாற்காலிக கழிப்பறைகளை விரைவாக அமைக்கவும், தர்கா குளத்தில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், நாகூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை உடனடியாக அகற்றி தூய்மையாகப் பராமரிக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நாகூர் தர்கா வாசல் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சாலையோரக் கடைகளை அகற்றவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
அரசு மருத்துவர் மீது நடவடிக்கை
நாகூர் நகர்நல மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அந்த மையத்தின் மருத்துவர் தமிழ்ச்செல்வி தொடர்ந்து பணிக்கு வராததையறிந்து உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
சுகாதாரத் துறை இணை இயக்குநர் வி.ஏ. ரால்ப்செல்வின், கோட்டாட்சியர் வே. மணிகண்டன், வட்டாட்சியர் எல். சம்பத்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் ஏ. சுல்தான் அப்துல்காதர், நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் ஷேக் அசன் சாகிபு, நாகூர் வளர்ச்சிக் குழுத் தலைவர் நெüஷாத், நகர்மன்ற உறுப்பினர் முகமது கபீர் ஆகியோர் உடனிருந்தனர்.