தினமலர் 29.09.2010
நான்கு பள்ளிகளை மூடும் பொள்ளாச்சி: நகராட்சி முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரப்பகுதியிலுள்ள மூன்று துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி சேர்த்து நான்கு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், இப்பள்ளிகளை மூட நகராட்சி தீர்மானித்துள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.பொள்ளாச்சி நகரப்பகுதியில், எட்டு துவக்கப்பள்ளிகளும், ஏழு நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில், பல பள்ளிகள் துவங்கி 80 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. நகராட்சி நிர்வாகத்தால், பள்ளி கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளில், 12 பள்ளிகளுக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்துள்ளார்.தற்போது, தனியார் பள்ளிகளின் மோகம் பெற்றோரிடையே அதிகரித்துள்ளதால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆண்டுதோறும், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, நாட்டிய நாடகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், மாணவர் சேர்க்கையில் பின்தங்கிய நிலையே உள்ளது.பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டிலுள்ள தெப்பக்குளம் ரோடு நகராட்சி துவக்கப்பள்ளியில், போதியமாணவர் எண்ணிக்கை இல்லாததால், 2008-09ம் கல்வியாண்டில் இப்பள்ளி வளாகத்தில் இருந்த கோட்டூர் ரோடு வழி நகராட்சி நடுநிலைப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது.
அதன்பின், அரசு அனுமதி பெற்று இப்பள்ளி மூடப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றிய ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு மாற்று பள்ளிக்கு மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நகரப்பகுதிக்குட்பட்ட ஒரு நடுநிலை மற்றும் மூன்று துவக்கப்பள்ளிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால், வேறு பள்ளிகளுடன் இப்பள்ளியை இணைத்து, இவற்றை மூட நகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பொள்ளாச்சி அழகாபுரி துவக்கப்பள்ளியில், 19 மாணவர்களும், 34 மாணவிகளும், பல்லடம் ரோடு வழி துவக்கப்பள்ளியில் 20 மாணவர்களும், 20 மாணவிகளும், கோவை ரோடு வழி துவக்கப்பள்ளியில் எட்டு மாணவர்கள், எட்டு மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு ஆசிரியரும் பணியாற்றுகின்றனர்.வெங்கட்ரமணன் ரோடு நடுநிலைப்பள்ளியில், 12 மாணவர்களும், 48 மாணவிகளும் படிக்கின்றனர். இங்கு, ஒரு தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரும், ஒரு அலுவலக பணியாளரும் பணியாற்றுகின்றனர். நான்கு பள்ளிகளின் பராமரிப்பு செலவும் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பல்லடம் ரோடு பள்ளி மட்டும் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.அழகாபுரி ரோடு பள்ளியை அப்பகுதியிலுள்ள வி.ஐ. ஆர்.ஏ., பள்ளியுடனும், மற்ற மூன்று பள்ளிகளை பாலகோபாலபுரம் நடுநிலைப்பள்ளியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சியின் இந்த முடிவிற்கு, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு பள்ளிகள் துவங்கப்படுகின்றன. நகரப்பகுதியிலுள்ள பள்ளிகள் மூலம் 500 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால், இப்பள்ளிகளை மூட நகராட்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இப்பள்ளிகளுக்கு கூடுதல் செலவு மேற்கொள்ள வேண்டியுள்ளதால், இதுபோல் மூட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.பள்ளிகளை மூடினால், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தரம் பாதிக்கும் நிலை ஏற்படும். ஒரு மாணவர் மட்டும் கல்வி கற்றால் கூட பள்ளியை மூடாமல் செயல்படுத்த வேண்டும் என்பது விதி. இங்குள்ள ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் வரை கல்வி கற்று வருகின்றனர். முதலாம் வகுப்பில் மட்டும் 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளனர்.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, நகரப் பள்ளிகளை மூடும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்றனர்.நகராட்சி கமிஷனர் வரதராஜிடம் கேட்ட போது, “”நான்கு நகராட்சி பள்ளிகளை மூட நகராட்சி நிர்வாகம் தீர்மானித் துள்ளது. இதற்காக, தெற்கு ஒன்றிய உதவி துவக்க கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட துவக்க கல்வி அலுவலர் ஆகியோரிடம் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்து விபரம் கோரப்பட்டுள்ளது.இதுவரை விபரம் தரவில்லை. மாணவர் சேர்க்கை குறித்த விபரம் கிடைத்தவுடன், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்படும். அவரின் வழிகாட்டுதலின்படி பள்ளிகளை மூடுவது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார்.