தினமணி 02.03.2010
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை
நாமக்கல், மார்ச் 1: கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு நாமக்கல்லில் சிலை அமைக்கப்படும் என, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் தெரிவித்தார்.
நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா, முன்னாள் மாணவரும் மத்திய இணை அமைச்சருமான செ. காந்திச் செல்வனுக்கு பாராட்டு விழா, பள்ளி வெள்ளி விழா, அதிக மதிப்பெண் பெற்றோருக்கு பரிசளிப்பு விழா, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் சகாயம் பேசியது:
தமிழகத்திலேயே கல்வியில் முன்னோடி மாவட்டமாக உள்ளது நாமக்கல். ஆண்டுதோறும் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே மாநில சாதனை படைத்து வருகின்றனர். அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் நடப்பாண்டு மாநில அளவில் சாதனை படைக்க தயார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
புதிய கட்டடத்தை திறந்து வைத்து மத்திய இணை அமைச்சர் செ. காந்திச் செல்வன் பேசியது:
கல்விக்கு பெருமை தேடித் தந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து, மாநில அளவிலான சாதனைக்கு எட்டும் தூரத்தில் அரசு பள்ளி மாணவ– மாணவியர் வந்துள்ளனர். வரும் காலங்களில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்தான் மாநில சாதனையை எய்துவர் என்ற நிலை உருவாகும். இதேபோல், அரசு பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கோட்டை நகராட்சிப் பள்ளிக்கு தற்போது ரூ. 50 லட்சத்தில் கட்டடம் கட்டித்தரப்பட்டுள்ளது. தொடர்ந்து இப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியால் மட்டுமின்றி கவிஞராலும் நாமக்கல்லுக்கு வரலாற்று பெருமை உள்ளது. இவரது பெருமையைப் போற்றும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10 மாடி கட்டடத்துக்கு கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சேர்க்கும் வகையில் கவிஞர் வாழ்ந்த நாமக்கல் மண்ணில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும். இந்த சிலை திறப்பு விழாவுக்கு முதல்வர் கருணாநிதியை அழைத்து வந்து கவிஞரின் சிலை திறந்து வைக்கப்படும். கோட்டை நகராட்சிப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு கவிஞரின் பெயர் சூட்டப்படும் என்றார் அவர்.