தினமணி 28.07.2010
நாமக்கல் நகராட்சிப் பகுதி கடைகளில் ஆங்கிலப் பலகை இருந்தால் அகற்றம்
நாமக்கல், ஜூலை 27: நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாமல் வேறு மொழிகளில் இருந்தால் அவை உடனடியாக அகற்றப்படும் என ஆணையர் ஜி. பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியது: வணிக நிறுவனங்களிலும், கடைகளிலும் இதர அனைத்து வர்த்தகம் தொடர்பான அமைப்புகளில் நிறுவப்படும் பெயர்ப்பலைகளில் கண்டிப்பாக தமிழ் மொழியில் பெயர்ப்பலகை இருத்தல் வேண்டும்.
தமிழ் மொழியைத் தவிர்த்து பிற மொழிகளில் பெயர்ப்பலகை இருந்தால் அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வர்த்தக நிறுவனங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேறு மொழிகளில் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை வரும் 15-ம் தேதிக்குள் அவர்களாகவே அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழியில் பலகை இடம் பெறும்போது அதில் தமிழுக்கு முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். தமிழ் மொழி இல்லாதபட்சத்தில் அந்த பலகைகள் உடனடியாக அகற்றப்படும். மேலும், அகற்றப்படும் பணிக்கான செலவுத் தொகையை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்படும்.