தினமலர் 24.02.2010
நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆக்ரமிப்பு அகற்றம் வருவாய் துறையினர் அதிரடி
நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்ரமிப்புகளை, வருவாய் துறையினர் அப்புறப்படுத்தினர். சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் ஸ்டாண்ட் நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 150 கடைகளும் உள்ளன. பஸ் ஸ்டாண்டுக்குள் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், நாகர்கோயில், திருச்செந்தூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தும், இங்கிருந்து சென்றும் வருகிறது. மொத்தம் 422 அரசு மப்சல் மற்றும் 169 டவுன் பஸ்சும், 130 தனியார் மப்சல் மற்றும் 9 டவுன் பஸ்சும் என மொத்தம் 730 பஸ்கள் நாள் ஒன்றுக்கு இந்த பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், மக்கள் என ஒயிரக்கணக்கானோர் நாமக்கல் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நகராட்சிக்கு சொந்தமான ஒரு சில கடைகள், தங்களது எல்லையை தாண்டி வராண்டாவை ஆக்ரமிப்பு செய்து கடையை நடத்தி வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை இல்லாததால், கடைமுன் உள்ள போர்டிகோவில் மக்கள் குவிகின்றனர். ஆனால் போர்டிகோவை கடைக்காரர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதால் பயணிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
சில நேரங்களில் கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் வெயிலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. அவ்வப்போது நகராட்சி சார்பில் ஆக்ரமிப்பு அகற்றுவதும், மீண்டும் சில்லறை வியாபாரிகள் ஆக்ரமிப்பு செய்வதும் அடிக்கடி அரங்கேற்றி வருவது தொடர்கதையாக நடக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் செய்யப்பட்டது. தாசில்தார் குப்புசாமி தலைமையில் வருவாய் துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்றினர். தள்ளுவண்டி கடைகள், தட்டுக்கூடை வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளின் பழக்கூடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். சைக்கிள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். “இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஆக்ரமிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றும் வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.�