தினமலர் 13.12.2013
நாய்களைப் பிடிக்க நவீன வாகனம்
சிதம்பரம் : சிதம்பரம், கடலூர் நகராட்சிகளுக்கு நாய்கள் பிடிக்கும் நவீன வசதிகள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள 130 தெருக்களில் 2,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடித்து பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். அவற்றைப் பிடிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கவுன்சிலர்களும் நகர மன்றத்தில் பேசி பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கலெக்டர், முதல்வர் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பினர். கவுன்சிலர்களின் நிர்பந்தத்தால், கடந்த 6 மாதங்களுக்கு முன், நகரில் திரிந்த 375 தெரு நாய்களைப் பிடித்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இருந்த போதிலும் அனைத்து நாய்களையும் பிடிக்க முடிய வில்லை. நகராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, தெரு நாய்களைப் பிடிக்க நவீன வசதி கொண்ட”” நாய்கள் பயண வாகனம்” உருவாக்கப்பட்டு, தமிழகத்தில் 50 நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் கடலூர் நகராட்சிக்கும் இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் மதிப்பு 6 லட்சம் ரூபாய். நாய்களைப் பிடித்து தனித்தனியாக அடைத்து வைக்க இந்த வாகனத்தில் தனிக்கூண்டு வசதி உள்ளது. கூண்டில் உள்ள நாய்களுக்கு சிகிச்சை அளிக்க, உணவு வழங்க வசதிகள் உள்ளன. கடலூர், சிதம்பரம் நகராட்சியில் திரியும் நாய்களைப் பிடித்து, இவ்வாகனத்தில் ஏற்றி வந்து கால்நடைத் துறை டாக்டர்கள் மூலம், நாய் ஒன்றுக்கு 150 ரூபாய் செலவில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.