தினமலர் 25.07.2012
நாய்களை பிடித்து இன விருத்தி கட்டுப்பாடு செய்ய மாநகராட்சி முடிவு
சென்னை:தெரு நாய்களை பிடித்து, இன விருத்தி கட்டுப்பாடு செய்ய, மேலும், ஒரு தொண்டு நிறுவனத்தை, சென்னை மாநகராட்சி அனுமதிக்க <உள்ளது.சென்ன மாநகர பகுதியில், 1.30 லட்சம் நாய்கள் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளது. தெருநாய்களுக்கு, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதோடு, தடுப்பூசி போடும் பணியை, தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மாநகராட்சி செய்து வருகிறது. நாட்டில் முதன் முறையாக, 1996ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. விலங்கியல் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகிய, எஸ்.பி.சி.ஏ., புளூகிராஸ் ஆப் இந்தியா, பீப்பிள் பார் அனிமல் ஆகிய அமைப்புகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில், இன விருத்தி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதையடுத்து நாய்களை பிடித்து இன விருத்தி கட்டுப்பாடு செய்ய, கூடுதலாக ஒரு அமைப்பை அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. “இன்டர்நேஷனல் டிரஸ்ட் ஆப் பீஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தை அனுமதிக்க உள்ளது.இந்த நிறுவனம் ஏற்கனவே, கத்திவாக்கம், மாதவரம் நகராட்சிகளில், நாய்களை பிடித்து, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதற்கான கட்டமைப்பு வசதிகள் அந்த நிறுவனத்திடம் <உள்ளதால், அதை பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்படும் என தெரிகிறது.3,607 நாய்கள் கருணை கொலைசென்னையில் மாதம் ஒன்றுக்கு, 1,400 நாய்கள் பிடிக்கப்பட்டு, இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தடுப்பூசியும் போடப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் (ஏப்., 2009 முதல் மார்ச் 2012 வரை), 54,919 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. 51,238 நாய்களுக்கு இன விருத்தி கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மிக மோசமாக, நோய் பரப்பும் நிலையில் இருந்த, 3,607 நாய்கள், கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன. தற்போது, 1.3 லட்சம் நாய்கள் மாநகரில் சுற்றித்திரிவதாக உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லை விரிவாகியுள்ளதால், ஒரு மாதத்தில் பிடிக்கும் நாய்களின் எண்ணிக்கை, 1,700 முதல் 1,900 வரை உயரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.