தினமலர் 24.02.2010
நாய், குரங்கு மட்டுமின்றி மாடுகளை பிடிக்கவும் தி.மலை நகராட்சி நிர்வாகம் புதிய முறை அமல்
திருவண்ணாமலை:தி.மலையில் நாய், குரங்கு ஆகியவை மட்டுமின்றி, மாடுகளும் மீண்டும் பிடிக்கப்படும். சரியாக பணிகளை செய்யாததால் இனி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் கவுன்சிலர்கள் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். செட்டிகுளமேடு, கீழ்நாத்தூர் பகுதியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.திருவண்ணாமலையில் நாய், குரங்கு தொல்லை அதிகளவு காணப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். நகராட்சி கமிஷனர் சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வனத்துறையினர், சுகாதார ஆய்வாளர்கள், பிராணிகள் வதை மற்றும் துயர் துடைப்பு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.பின்னர், இது குறித்து நகராட்சி சேர்மன் ஸ்ரீதரன், துணைத்தலைவர் செல்வம், கமிஷனர் சேகர் ஆகியோர் கூறியதாவது:தி.மலையில் குரங்கு, நாய்களுடன் மீண்டும் மாடு தொல்லை காணப்படுகிறது. இது குறித்து பல தரப்பில் இருந்தும் அதிகளவில் புகார்கள் வருகின்றன. எனவே, வனத்துறை மூலம் தி.மலை நகரில் மார்ச் 2ம் தேதி முதல் குரங்குகள் பிடிக்கப்பட்டு, காட்டின் உட்பகுதியில் விடப்படும். அதேபோல், வனவிலங்கு நல மையம் மூலம் நாய்களும் பிடிக்கப்படும். பிடிக்கப்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு பூசியும், கருத்தடையும் செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்தில் விடப்படும்.பிராணிகள் வதை மற்றும் துயர் துடைப்பு அமைப்பு மூலம் நகரில் ஏற்கனவே 62 மாடுகள் பிடிக்கப்பட்டன. இதன் மூலம் 62 ஆயிரம் ரூபாய் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டது.
இந்த அமைப்பை சேர்ந்த ஊழியர்களுக்கு பல தரப்பில் இருந்தும் மாடு பிடிக்கும்போது மிரட்டல் வந்ததாக தெரிவித்தனர். அதனால் போலீஸ் பாதுகாப்புடன் மார்ச் 3ம் தேதி முதல் மீண்டும் மாடுகள் பிடிக்கும் பணி தொடங்கப்படும்.நாய் தொல்லை தொடர்பாக 04175-310817 என்ற டெலிபோன் எண்ணிலும், மாடு தொல்லை தொடர்பாக 98401 22654, குரங்கு தொல்லை தொடர்பாக 94433 68777 என்ற செல்போன் எண்ணிலும் புகார் செய்யலாம்.திருவண்ணாமலை நகராட்சியில் மொத்தம் 145 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். சாக்கடை அடைப்புகளை நீக்குவது உட்பட அடிப்படை சுகாதார பணிகளை இவர்கள் மேற்கொள்ளவில்லை என புகார்கள் வருகின்றன. எனவே, இவர்களை இனி அந்தந்த வார்டு கவுன்சிலர் கட்டுப்பாட்டின் கீழ் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் ஒப்படைக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சரியாக பணிகளை செய்தார்கள் என்று எழுதி கொடுத்தால்தான் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
அதோடு, சரிவர பணிகளை செய்யாவிட்டால், அவர்களை வேறு நகராட்சி மாறுதல் செய்வது, பணிகளை செய்யவே மறுத்தால் அவர்களை பணி நீக்கம் செய்வது உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இப்போதே நகரில் கடும் வெயில் நிலவி வருகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் செட்டிகுளமேடு, கீழ்நாத்தூர் பகுதிகளில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி உடனடியாக அமைக்கப்படும். தினமும் லாரி மூலம் இவைகளில் குடிநீர் ஊற்றப்பட்டு அங்கிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.மேலும், நகரில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் அதிநவீன மருத்து வாங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.