நாளைமுதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
மூன்றாவது மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து 20 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மூன்றாம் மண்டலத்தில் உள்ள 96 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து 44 நாள்கள் மூன்று சுற்றுகளாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முதல் சுற்றுக்கான தண்ணீர் கடந்த 2012 டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 2013 ஜனவரி 2 ஆம் தேதி வரை திறந்து விடப்பட்டது. இரண்டாவது சுற்றுக்கான தண்ணீர் ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை திறந்து விடப்பட்டது.
மூன்றாவது சுற்றுக்கான தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பொறியாளர்கள் மற்றும் நீர் பகிர்மானக் குழு தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தலைமையில் உடுமலை சாலையில் உள்ள பிஏபி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் மூன்றாவது மண்டலம் மூன்றாவது சுற்று பாசனத்திற்காக 750 மில்லியன் கனஅடி நீரை வரும் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிவரை திறந்துவிட முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் செல்வராஜ், உடுமலை கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியம், பகிர்மான குழுத் தலைவர்கள் அருண், எஸ்.ஆர்.ராஜகோபால், சாமியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.