நாளை முதல் அம்மா உணவகத்தில் பொங்கல், சப்பாத்தி, எலுமிச்சை சாதம்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் நாளை(ஜூன் 2) முதல் மலிவு விலையில் பொங்கல், சப்பாத்தி, எலுமிச்சை சாதம் வழங்கப்படுகிறது.இதனை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை, மதுரை உள்பட 4 மாநகராட்சிகளில் அம்மா உணவகங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிகிறது.
சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு இட்லியும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர்சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சுமார் ஒரு கோடியே 85 லட்சம் இட்லிகளும், 37 லட்சம் சாம்பார் சாதங்களும், 25 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அம்மா உணவகத்துக்கு மக்கள் அளித்து வரும் அமோக வரவேற்பு காரணமாக, சென்னையில் காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியத்தில் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும், மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன் படி புதிய உணவு வகைகள் நாளை முதல் அம்மா உணவகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.