தினமணி 21.01.2010
நிறைவடைந்தது சாக்கடை கட்டுமானப் பணி
கோவை, ஜன.20:”தினமணி‘ செய்தியைத் தொடர்ந்து சாயிபாபாகாலனி கே.கே.புதூரில் பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கட்டுமானப் பணி நிறைவடைந்தது.
கே.கே.புதூர் மணியம் வேலப்பர் வீதியில் சாலையோர சாக்கடை அமைக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலையின் குறுக்கே செல்லும் சாக்கடையின் கட்டுமானப் பணி ஆரம்பமானது. இந்த சாக்கடை மீது முழுமையாக கான்கீரிட் போட்டு மூடப்படவில்லை எனவும், கட்டுமானப் பணி துவங்கிய நாள் முதல் அவ் வழியே மினி பஸ்கள் இயக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி “தினமணி‘யில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக சாக்கடை மீது முழுமையாக கான்கீரிட் போடும் பணி முடிக்கப்பட்டது. இவ் வழியே மீண்டும் மினி பஸ்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் கே.கே.புதூர் மக்கள்.
ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் ஒசூர், ஜன.20: ஒசூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு 2008 நவ.28-ல் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.7.49 கோடி நிதியில் பஸ் நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 2 முறை வரைபடத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கால தாமதம் ஆனது. பிறகு மேலும் ஒரு கோடி நிதியில் பஸ் நிலையம் முழுவதும் சிமென்ட் தரைத்தளம் போட தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் துரு பிடிக்காத இரும்பு கம்பிகள் பதிக்க மேலும் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்பொழுது ரூ.10 கோடி நிதியில் ஐடி கட்டடம் போல பஸ் நிலையம் உருவாகி வருகிறது.
இந்த நிதி முழுவதும் தமிழக அரசின் டிபிட்கோ நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று கட்டப்பட்டு வருகிறது. பின்னர் பஸ் நிலையத்தில் கிடைக்கும் கடை வாடகை, பஸ் நுழைவு வரி, கழிப்பிடக் கட்டணம் உள்ளிட்ட வருவாய் மூலம் ஒசூர் நகராட்சி இந்த நிதியை திருப்பி செலுத்த வேண்டும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதத்தில் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் கடைக்கான ஏலம் 3 முறை நடத்தப்பட்டது. இதில் 70 கடைகளுக்கு ஏலம் விட்டதில் கீழ் தளத்தில் உள்ள 17 கடைகள் மட்டும் ஏலம் போனது. தற்பொழுது பிப்.10-ல் 4-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்–ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.