தினமலர் 29.10.2010
நிலச்சரிவு பகுதிகளில் உயர்ந்து வரும் கட்டடங்கள் : அதிகாரிகள் அதிர்ச்சி
ஊட்டி : ஊட்டி– குன்னூர் சாலையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழையால் பாதிப்புகள் ஏற்பட்டு சாலை துண்டிப்பும் தொடரும் நிலையில், புவியியல் துறை எச்சரித்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும், 1993ம் ஆண்டு மாநில அரசால் “மாஸ்டர் பிளான்‘ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தில் உள்ள சாராம்சங்களை முறையாக பின்பற்றாததால், விதிமீறி கட்டடங்கள் பெருகின.
“பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்த வேண்டும்’ என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக சிலர் தடையாணை பெற்று, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் “ரியஸ் எஸ்டேட்‘ என்ற பெயரிலும், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரிலும் விதிகளை மீறிய பெரிய கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. இதில் உள்ள விதிமீறல் குறித்து அறியாமல், புதிய வீடுகளை வாங்கிய பலரும் அவற்றை பிறருக்கு விற்பனை செய்ய முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அனுமதியற்ற கட்டடங்கள் குறித்து வரும் புகார்களுக்கு, “நீதிமன்ற உத்தரவு வந்த பின் நடவடிக்கை எடுக்கலாம்‘ என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பதிலளித்து வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஊட்டி– குன்னூர் சாலையில் பிக்கட்டி என்ற பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன் சாலையில் பெரிய பிளவு ஏற்பட்டு, சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு கடந்த ஒரு மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலை பிளவை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கேத்தி, அருவங்காடு, குன்னூர் பகுதிகளில், அரசு துறை அதிகாரிகள் சிலர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், “சாலை துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டுள்ள சில கட்டடங்களில் மக்கள் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும்; அந்த பகுதிகளில் புவியியல் துறையினர் எச்சரித்த இடங்களில் கட்டடங்கள் கட்டுவதை உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்‘ என அறிவுறுத்தினர். இதே அறிவிப்பு தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேத்தி பகுதியில் நடந்த நிலச்சரிவுகளின் போதும் புவியியல் துறையினரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை மதிக்காமல், பிக்கட்டி, கேத்தி, அருவங்காடு பகுதிளில் 150 அடி பள்ளத்தில் இருந்து, வானுயர்ந்த கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதற்கான அனுமதியை விதிமுறைகளை மீறி, உள்ளாட்சி மன்றங்கள் வழங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றால், கட்டட உரிமையாளர்கள் சிலர், நீதிமன்றத்துக்கு சென்று தடையாணை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, பிக்கட்டி சுற்றுப்புற பகுதியில் பல நூறு அடி உயரத்துக்கு கட்டடப்படும் கட்டடங்கள் குறித்து சில அதிகாரிகள் மாநில அரசுக்கு “ரகசிய‘ புகார்களை அனுப்பி உள்ளனர். இத்தகைய கட்டடங்கள் உயருவதற்கு காரணமான, அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் குறித்தும் அந்த ரகசிய பட்டியலில் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.