தினமலர் 21.04.2010
நிலத்தடி நீரை பாதுகாப்பதில் யாருக்கும் அக்கரையில்லை: மழை நீரை சேமிக்கும் திட்டங்கள் இல்லை
ஆண்டிபட்டி:ஆழ்குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விரயமாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் சேமிப்புக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் யாருக்கும் அக்கரையில்லாத நிலை உள்ளது. ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு குன்னூர் ஆற்றில் இருந் தும், சேடபட்டி–ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த கன்னிமார்குளம், பொட்டல்குளம், மின்னலடிக்குளம், மாரியம்மன் குளம் ஆகியவை தற்போது குடியிருப்பு பகுதிகளாகி விட்டது. ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரை இக்குளங்களில் தேங்கி நீற்கும் நீரால் நிலத்தடி நீர் மட்டம் சமன் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் பேரூராட்சியில் பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து மோட்டார் மூலம் உறிஞ்சி தெருக்களில் பல இடங்களில் குழாய்கள் அமைத்துள்ளனர். தற்போது ஆழ்குழாய் நீர் எந்நேரமும் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுகிறது. குழாய்களில் வரும் நீரை பல வழிகளிலும் விரயமாக்கி விடுகின்றனர். உறிஞ்சப்படும் அளவுக்கு சேமிப்புக்கான வழிவகை இல்லை. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
சக்கம்பட்டியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் சலவைப்பட்டறை மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வீணாக சாக்கடை வழியாக திருப்பி விடப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால் கிடைக்கும் மழை நீரும் சேமிப்புக்கான இடங்கள் இல்லாததால் சாக்கடை கால்வாயில் சென்று வீணாகிவருகிறது. மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை எடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் நிலத்தடி நீரை பெற மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.