நிலுவை வரி வசூல்: நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு
வாணியம்பாடி நகராட்சியில் நிலுவை வரிகளை வசூலித்து சாதனை படைத்த நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வாணியம்பாடி நகராட்சியின் அவரச மற்றும் சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை நீண்ட காலமாக செலுத்தாவர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர் ரவி, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ரவி, உதவியாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை வராமல் இருக்க அனைத்து வார்டுகளிலும் உள்ள சிறுமின்விசை நீர்த் தேக்கத் தொட்டிகளை பராமரிக்க வேண்டும். இதுவரை வரி போடாத வீடுகளுக்கு, கடைகளுக்கு வரிகள் விதிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர், குடிநீர் பிரச்னை வராமல் இருக்க ரூ.7 லட்சம் மதிப்பில் அனைத்து வார்டுகளிலும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். வரி போடாத வீடுகள், கடைகளுக்கு வரி போடப்படும் என்றார்.
கூட்டத்தில் 62 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. நகராட்சி ஆணையர் ரவி, நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.