தினமலர் 05.08.2010
நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டினால், நடவடிக்கை; கலெக்டர்.
மதுரை:””குளம், வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டினால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என மதுரை கலெக்டர் சி.காமராஜ் பேசினார்.மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைஅலுவலகத்தை தூய்மைப் படுத்தும் பணி நேற்று நடந்தது. இதனை துவக்கி வைத்த கலெக்டர் சி.காமராஜ் பேசியதாவது:மதுரை மாவட்டம் முழுவதும் இப்பணி நடக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், நண்பர் குழு, செஞ்சிலுவை சங்கம், தனியார் ஆஸ்பத்திரிகள் ஈடுபட உள்ளன. இக்குழு மூலம் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக., 10ம் தேதி ஒத்தக்கடையில் நடக்கும் தூய்மை பணியில் பேரூராட்சி துப்புரவு பணியாளர், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மகளிர் குழுக்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என 1500க்கும் மேற் பட்டோர் பங்கேற்பர். குளங்கள், கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகளை குவிப்பதால், மாசு ஏற்படுவதுடன், கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்படுகிறது. அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவோர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.