தினமணி 25.06.2013
தினமணி 25.06.2013
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜூலை இறுதிக்குள் முழு உற்பத்தி தொடங்கும்
நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரைக் குடிநீராக்கும்
நிலையத்தில் ஜூலை மாத இறுதிக்குள் முழு உற்பத்தி தொடங்கப்படும் என்று
குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் அருகே உள்ள நெம்மேலியில், சுமார் 40
ஏக்கர் பரப்பளவில் ரூ.871 கோடி செலவில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக
முதல்வர் ஜெயலலிதா இதைத் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு மற்றும் தகவல்
தொழில்நுட்ப பூங்கா பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 கோடி
லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் முதலில் 3 கோடி லிட்டர்
குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. படிப்படியாக உற்பத்தித் திறன்
அதிகரிக்கப்பட்டு தற்போது 8 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி
செய்யப்படுகிறது.
ஜூலை முதல் வாரத்தில் 9 கோடி லிட்டராக உற்பத்தி அதிகரிக்கும் எனவும்,
அந்த மாத இறுதிக்குள் உற்பத்தித் திறன் 100 சதவீதத்தை எட்டிவிடும் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியது:
குடிநீர் பற்றாக்குறை: நெம்மேலியிலிருந்து பெறப்படும் குடிநீர்
திருவான்மியூர், பள்ளிப்பட்டு உள்ளிட்ட தென் சென்னைப் பகுதிகளில்
விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும்
குடிநீர் பற்றாக்குறை காரணமாக நகரின் பல இடங்களுக்கும் நெம்மேலி குடிநீர்
விநியோகிக்கப்பட்டு வருகிறது.
திருவான்மியூர், வேளச்சேரி பகுதிகளுக்கு ஒரு நாளும், சாந்தோம், நந்தனம்,
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மறுநாளும் குடிநீர்
விநியோகம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளில் இரு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நெம்மேலி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நெம்மேலியில் தற்போது உற்பத்தித் திறன் உயர்ந்து
வருகிறது. வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்துக்குள் நெம்மேலியில் 10 கோடி
லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.