தினமலர் 18.06.2010
நெல்லை கமிஷனர் உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
திருநெல்வேலி : நெல்லையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவை மீறி செயல்பட்ட பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நெல்லை கைலாசபுரத்தில் இனிப்பு மற்றும் கேக் தயாரிப்பு பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் சுகாதாரக்குறைபாடு இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன் நாயர், லெட்சுமிகாந்தன், சுகாதார அதிகாரி டாக்டர் கலுசிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து மாநகராட்சி கமிஷனரிடம் அறிக்கை சமர்பித்தனர். அந்த அறிக்கை குறித்து விளக்கம் கோரி நேரில் ஆஜராக பேக்கரி உரிமையாளர் கமாலுதீனுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராகததாலும், சுகாதாரக்கேடுகளை சரிசெய்யாததாலும் பேக்கரி தொழில் செய்ய தடை விதித்து கமிஷனர் சுப்பையன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை மீறி கமாலுதீன், பகல் நேரத்தில் கடையை பூட்டி வைத்தும், இரவு நேரத்தில் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் தச்சநல்லூர் மண்டல உதவிக்கமிஷனர் சுல்தானா அந்த பேக்கரிக்கு சென்று சீல் வைத்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், ரத்தினகுமார், பாலபபிதா, துப்புரவு மேற்பார்வையாளர் பழனி, சங்கர் சென்றனர்.